Published : 11 Dec 2021 05:13 PM
Last Updated : 11 Dec 2021 05:13 PM

கரோனா தொற்று பாதுகாப்பு, பற்கள் பராமரிப்பு, நெகிழி தவிர்ப்பு: பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

சென்னை

சென்னை மாநகராட்சி சார்பில் பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கரோனா தொற்று பாதுகாப்பு, பற்கள் பராமரிப்பு மற்றும் நெகிழிப் பயன்பாட்டுத் தவிர்ப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி இணைந்து திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட மாதவரம் நெடுஞ்சாலை, பள்ளித் தெருவில் இயங்கும் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கோவிட் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு, நெகிழிப் பொருட்களால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் மற்றும் பற்களை எவ்வாறு முறையாகப் பராமரிப்பது குறித்து இன்று (10-12-2021) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இம்முகாமில், மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் பட்ட மேற்படிப்புக் கல்வியின் இயக்குநர் டாக்டர் ஜெய்தீப் மகேந்திரா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பல் பராமரிப்பு குறித்தும், ஒரு தடவை உபயோகப்படுத்தி தூக்கி எறியும் அரசால் தடை செய்யப்பட்ட 14 வகை நெகிழிப் பொருட்களால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்தும், அதற்கு மாற்றாகப் பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்தும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும், கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் அவ்வப்போது கைகளை சோப்புக் கரைசல் அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் குறித்தும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து மாணவியர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் SS சாசுன் ஜெயின் கல்லூரி சார்பில் துணிப் பைகளையும், கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் விழிப்புணர்வுக் கையேட்டையும் வழங்கினார்.

மேலும், பல் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் அம்பலவாணன், தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு முறையாகப் பல் மற்றும் ஈறுகள் பராமரிப்பது குறித்துச் சிறப்புரையாற்றினார். மேலும் விழிப்புணர்வு நாடகங்களும் நடத்தப்பட்டன. மாநகராட்சியின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு சம்பந்தமாக பொருட்காட்சி அமைக்கப்பட்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி, சுகாதாரக் கல்வி அலுவலர் முனைவர் சீனிவாசன், உதவிக் கல்வி அலுவலர் நளின குமாரி மற்றும் தலைமை ஆசிரியை செல்வகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்''.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x