Published : 04 Apr 2014 12:00 AM
Last Updated : 04 Apr 2014 12:00 AM

2 ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பாக ராஜாவுடன் நேரடி விவாதத்துக்கு தயாரா?- ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி

2 ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பாக ராஜாவுடன் நேரடி விவாதத்துக்கு ஜெயலலிதா வருவாரா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில், இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அலைக்கற்றை இமாலய ஊழலை முன்னின்று நடத்திய கட்சி திமுக என்று ஜெயலலிதா விமர்சனம் செய்கிறார். பல வழக்குகளில், பல நீதிமன்றங்களில் குற்றவாளி என்று கூறப்பட்டு, பல வழக்குகளில் தண்டனையும், சில வழக்குகளில் மன்னிப்பும் வழங்கப்பட்டவர் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு பல்வேறு காரணங்களால், கடந்த 16 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் இதைப் பற்றிக் கவலைப்படாமல் கோவை கூட்டத்தில் ராஜாவைப் பற்றி ஜெயலலிதா பேசியுள்ளார். இதற்கு ராஜா அளித்த பதிலில், ஜெயலலிதா கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது, இது குறித்து, ஜெயலலிதா என்னுடன் நேரடியாக விவாதிக்கத் தயாரா என கேட்டுள்ளார். எனவே முதலமைச்சர் தனது பேச்சுக்கு முழு விளக்கம் பெற, பொதுமக்கள் முன்னிலையில் ராஜாவுடன் ஒரு முறை நேரடியாக விவாதிக்க முன்வரலாம் அல்லவா?

உங்கள் மனைவியும், மகளும் இயக்குநர்களாக இருந்த குடும்பத் தொலைக்காட்சியின் கணக்கில், 214 கோடி ரூபாய் பணம் யாருடைய கணக்கில் வந்தது என்றும், எதற்காகக் கொடுத்தார்கள் என்றும், இதை விளக்க கருணாநிதி தயாரா என்று கேட்டிருக்கிறார். இதுகுறித்து, ஏற்கனவே கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர் சரத்குமார் விரிவாகப் பதில் கூறியுள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை யில் இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சூடுபிடித்திருக்கும் நிலையில், அதிலிருந்து தப்பிக்கவும், தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பவும் மீண்டும் ஜெயலலிதா முயற்சித்திருக்கிறார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x