Published : 05 Mar 2016 08:07 PM
Last Updated : 05 Mar 2016 08:07 PM

சமூக வலைதளங்களில் தனிப்பட்ட முறையில் தவறாக பிரச்சாரம் செய்தால் சிறை தண்டனை: ராஜேஷ் லக்கானி

சமூக வலைதளங்களில் தனிப்பட்ட நபரை விமர்சனம் செய்பவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் விமர்சித்தால் சட்டப்படி ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்படும். இதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகள், நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

''சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் செய்யும் தேர்தல் பிரச்சாரத்தை கண்காணிக்க தனிக் குழு அமைக்கப்பட உள்ளது. அரசியல் கட்சி சார்பில் தனிப்பட்ட நபரை விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டால் அதில் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்.

தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொள்வது இந்திய தண்டனைச் சட்டம் 188-ன்படி குற்றப்புகாருக்கு உகந்ததாகும். அதற்கு 1 மாத சிறை தண்டனை, ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இதில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது.

ஒவ்வொரு வேட்பாளரும் அதிகபட்சம் ரூ.28 லட்சம் வரை செலவிடலாம். இணையதளங்கள், சமூக வலைதளங்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் செலவினங்களும் கணக்கில் கொள்ளப்படும்.

தேர்தல் தொடர்பான அனைத்து புகார்களையும் ‘1950’ என்ற எண்ணில் தெரிவிக்கலாம். இதுதவிர, 2 நாட்களில் மாவட்டவாரியாக வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்படும். அதிலும் தேர்தல் தொடர்பான புகார்களை அனுப்பலாம். தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து இதுவரை 106 புகார்கள் வந்துள்ளன. அதன்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று ராஜேஷ் லக்கானி கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x