Last Updated : 10 Dec, 2021 04:57 PM

 

Published : 10 Dec 2021 04:57 PM
Last Updated : 10 Dec 2021 04:57 PM

விரைவில் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

தமிழ்நாட்டுக்கான கல்விக் கொள்கை விரைவில் உருவாக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

அரசு மாதிரிப் பள்ளி மாணவ- மாணவிகள் 80 பேருக்கு மாவட்ட ஆட்சியரின் நிதியின் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பில் கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி, இந்திரா கணேசன் கல்வி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவ- மாணவிகளுக்குப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கையடக்கக் கணினிகளை வழங்கினார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ர.பாலமுரளி, இந்திரா கணேசன், கல்விக் குழுமச் செயலாளர் க.ராஜசேகரன், இயக்குநர் க.பாலகிருஷ்ணன், அரசு மாதிரிப் பள்ளி ஒருங்கிணைப்பாளர் த.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:

”அரசுப் பள்ளிகளில் சிறந்து விளங்கும் மாணவ- மாணவிகள் உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி வாய்ப்பைப் பெறும் நோக்கில் அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. அங்கீகாரம் புதுப்பிக்காததால் ஊதியம் கிடைக்காமை உட்பட பள்ளிக் கல்வித்துறையில் 12 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றின் மீது பள்ளிக் கல்வி ஆணையர் கவனம் செலுத்தி வருகிறார். வழக்குகள் முடிவுக்கு வரும்போது கல்வித் துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் படிப்படியாகத் தீர்வு கிடைக்கும்.

தமிழக ஆளுநர் செல்லுமிடங்களில் எல்லாம் தேசியக் கல்விக் கொள்கையை வலியுறுத்தி வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கம் திட்டம் உள்ளது. இதையொட்டி, கடந்த வாரம் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது.

மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கும் குழுவில் யார் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்பது குறித்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து இறுதி அறிக்கை கிடைத்தவுடன், மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவின் மூலமாக விரைவில் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும். அப்போது, தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் நமது நிலைப்பாடு தெரியும்.

ஆசிரியர்கள் பணி மாறுதல் தொடர்பான நடவடிக்கைகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. இதையொட்டியே பதவி உயர்வும் உள்ளது. தற்போது 2,774 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்கள் பணி நிரவல் முடிந்த பிறகு தேவையான இடங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

3, 5, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சரியானது அல்ல.

அலுவல் நேரங்களில் பேருந்துப் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில், தேவைப்படும் வழித்தடங்களில் போதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x