Published : 11 Mar 2016 06:59 PM
Last Updated : 11 Mar 2016 06:59 PM

ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் ரூ.40 கோடி மதிப்பில் துணிகள் தேக்கம்: தேர்தல் விதியால் பாதிப்பதாக குற்றச்சாட்டு

தேர்தல் ஆணைய கெடுபிடிகளால், ஈரோடு கனி ஜவுளி சந்தையில் கோடைக்காலத்தில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட ரூ.40 கோடி மதிப்புள்ள ஜவுளி வகைகள் தேக்கமடைந்துள்ளன.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதை கண்காணிக்க பறக்குபடைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து சென்றால் அவை பறிமுதல் செய்யப்படுகின்றன. இதனால் வணிகர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு அனைத்து தொழில் வணிக சங்க கூட்டமைப்பின் தலைவர் சிவநேசன் கூறியதாவது:

இதர மாநிலங்களோடு சேர்த்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தில் முன் கூட்டியே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. எங்களை பொறுத்தவரை ஏப்ரல் 22-ம் தேதிக்கு பின் நடத்தை விதிமுறை களைகொண்டு வருவதுதான் சரியானதாகும். வங்கியில் பணம் கட்ட சலானுடன் எடுத்துச் சென்றால் கூட, அந்த பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்கும் நிலை உள்ளது. வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்தால், நடைமுறையில் உடனடியாக வங்கி கணக்கு புத்தகத்தில் பதிவு உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலையில், ஆதாரம் காட்டுவது சிரமமாக உள்ளது. எனவே, வணிகர்கள் என்பதற்கான ஆதாரத்தை காட்டினால் சோதனைக்கு பின்னர் அனுப்பி விட வேண்டும்.

குறைந்தபட்சம் ரூ 5 லட்சம் வரை வணிகர்கள் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும். அதிக தொகை எடுத்துசெல்வதில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டால், பணத்தை பறிமுதல் செய்யாமல் வணிகரிடம் பின்னர் விசாரணை நடத்தி ஆதாரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கனி ஜவுளிச்சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:

கனி ஜவுளிச்சந்தையில் திங்கள் கிழமை இரவு தொடங்கி செவ்வாய் இரவு நிறைவடையும். சாதாரண நாட்களில் ரூ.2 கோடிக்கும், பண்டிகை நாட்களில் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடக்கும்.

மதுரை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடக, ஆந்திர, கேரள மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் இங்கு வருவர். தேர்தல் கெடுபிடிகளால், இந்த வாரம் ஜவுளிச்சந்தை முடங்கியது.

இந்த வாரம் ரூ.20 லட்சத்துக்கு மட்டுமே வியாபரம் நடந்தது. தென் மாவட்டங்களில் இருந்து 100 வியாபாரிகள் வழக்கமாக சந்தைக்கு வருவார்கள். ரூ.ஒரு கோடிக்கு மேல் இவர்களால் வர்த்தகம் நடக்கும். இவர்கள் இந்த வாரம் சந்தைக்கு வரவில்லை.

கோடைக்கால ஆடைகள் விற்பனை இந்த மாதம் தொடங்கும் இதற்காக ரூ.40 கோடி மதிப்பிலான பருத்தி ஆடைகள் சந்தையில் குவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வியாபாரிகள் வராததால், அவை தேங்கியுள்ளன. இந்நிலை இரு மாதங்களுக்கு தொடருமானால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

கனி ஜவுளி சந்தையை பொறுத்தவரை நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து பேரம் பேசி வாங்க முடியும். ரொக்கமாக பணம் கொடுக்கும் போது மட்டுமே இது சாத்தியமாகிறது. எனவே, சிறு வியாபாரிகள் ரொக்க கொள்முதல் விற்பனையைத்தான் விரும்புகின்றனர்; பின்பற்றுகின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x