Published : 08 Dec 2021 04:07 AM
Last Updated : 08 Dec 2021 04:07 AM

2-வது முறையாக காஞ்சி, செங்கை மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஆய்வு

தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் சென்னை மற்றும்புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்நிலையில் கடந்த மாதம் 29-ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உட்பட்ட வரதராஜபுரம், பி.டி.சி. குடியிருப்பு, அமுதம் நகர், டி.டி.கே. நகர், வன்னியன்குளம், குட்வில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இந்நிலையில் மீண்டும் நேற்று முதல்வர் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வன்னியன்குளம், டி.டி.கே. நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் முதல்வருக்கு விளக்கம் அளித்தனர். அதன் பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட அமுதம் நகரில் வெள்ளத் தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட வரதராஜபுரம், பி.டி.சி. குடியிருப்பு, மகாலட்சுமி நகர் பகுதியில் அடையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் இருந்துநீர்வள ஆதாரத் துறையால் மேற்கொள்ளப்பட்ட வெள்ளைத் தடுப்புப் பணிகளை பார்வையிட்டார்.

பாதாள சாக்கடை திட்டம்

பின்னர் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கன்னடபாளையம் பகுதி அருகே உள்ள அணுகு சாலையில், மண்ணூரான் குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு செய்தார். தான் தொடங்கியபாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

கடந்த 2006-ம் ஆண்டு திமுகஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக ஸ்டாலின் இருந்தபோது, தாம்பரம் நகராட்சியில் 2009-ம் ஆண்டு பாதாள சாக்கடைதிட்டத்தை கொண்டு வந்தார். ரூ.161கோடி செலவில் தொடங்கப்பட்ட இத்திட்டப் பணி கடந்த 12 ஆண்டுகளாக முடியாமல் உள்ளது.

இந்த ஆய்வின்போது தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத், காஞ்சிபுரம் ஆட்சியர் மா.ஆர்த்தி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன், எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா உட்பட பலர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x