Published : 07 Dec 2021 03:07 AM
Last Updated : 07 Dec 2021 03:07 AM

மாடித் தோட்டம், காய்கறி தோட்டம் அமைக்க மானிய விலையில் செடி, விதைகள் விநியோகம்: திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை

வேளாண் துறை சார்பில் மானிய விலையில் மாடித் தோட்ட தளைகள், காய்கறித் தோட்டத்துக்கான காய்கறி விதைகள், ஊட்டச்சத்து தளைகளை பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசால் முதல்முறையாக கடந்த ஆக.14-ம் தேதி வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அறிவிக்கப்பட்டபடி, காய்கறி வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், மாடித் தோட்ட தளைகள், ஊட்டச்சத்து தளைகள் என்பது உட்பட ரூ.95 கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டத்தின் கீழ் ரூ.6.75 கோடியில் நகர் பகுதிகளில் ரூ.900 மதிப்புள்ள 6 வகை காய்கறி விதைகள், செடி வளர்க்கும் 6 பைகள், 2 கிலோ அளவிலான 6 தென்னை நார்க்கட்டிகள், 400கிராம் உயிர் உரங்கள், 200 கிராம்உயிரி கட்டுப்பாட்டு காரணி, 100 மி.லி. இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து, வளர்ப்பு கையேடு ஆகியவை அடங்கிய மாடித்தோட்ட தளைகளை ரூ.225 என்ற மானிய விலையில் பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் ஒருவருக்கு அதிகபட்சம் 2 மாடித்தோட்ட தளைகள் வழங்கப்படும்.

12 வகை விதைகள்

அதேபோல, ஊரகப் பகுதிகளில் காய்கறித் தோட்டம் அமைக்கரூ.90 லட்சம் செலவில் ரூ.15-க்குகத்தரிக்காய், மிளகாய், வெண்டைக்காய், தக்காளி, அவரை, பீர்க்கன், புடலை, பாகற்காய், சுரைக்காய், கொத்தவரை, சாம்பல் பூசணி, கீரைகள் அடங்கிய 12 வகை காய்கறி விதை தளைகளை பயனாளிகளுக்கு முதல்வர் வழங்கினார். இதையும் 2 தொகுப்புகள் வரை ஒருவர் பெறலாம்.

மூலிகை செடிகள் வளர்ப்பு

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், மூலிகைசெடிகள், நோய் எதிர்ப்பு சக்திஉடைய பழங்கள், காய்கறிகளை வளர்த்து பயன்பெற ரூ.1.50கோடியில் ரூ.25-க்கு பப்பாளி, எலுமிச்சை, முருங்கை, கருவேப்பிலை, திப்பிலி, கற்பூரவல்லி, புதினா, சோற்றுக்கற்றாழை ஆகிய செடிகள் அடங்கிய ஊட்டச்சத்து தளைகளை பயனாளிகளுக்கு முதல்வர் வழங்கினார். ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சம் ஒரு தொகுப்பு வழங்கப்படும்.

மக்கள் விண்ணப்பிக்கலாம்

இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் https://tnhorticulture.tn.gov.in/kitஎன்ற இணையதளம் மூலமாகவிண்ணப்பித்து, சத்தான காய்கறிகள், பழங்கள், நோய் எதிர்ப்பு மூலிகைகளை உட்கொள்ளும் வாய்ப்பையும், ஊக்கம் தரும்பொழுதுபோக்கையும் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் இறையன்பு, வேளாண் துறைசெயலர் சமயமூர்த்தி, தோட்டக்கலைத் துறை இயக்குநர் பிருந்தாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x