Published : 06 Dec 2021 03:08 AM
Last Updated : 06 Dec 2021 03:08 AM

அதிகளவு வெள்ளம் தேங்கிய புளியந்தோப்பு பகுதியில் ரூ.7.10 கோடியில் புதிய மழைநீர் வடிகால்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

புளியந்தோப்பு பகுதியில் ரூ.7.10 கோடி மதிப்பில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக சென்னை மாநகராட்சி திரு.வி.க நகர் மண்டலத்துக்குட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டெமலஸ் சாலை, டிகாஸ்டர் சாலை ஆகிய பகுதிகளிலும் மற்றும் பல்வேறு சிறு தெருக்களிலும் மழைநீர் தேங்கியது.

தற்போது உள்ள மழைநீர் வடிகால் செங்கல் மற்றும் உரல் வடிகால்களாக உள்ளன. இந்த வடிகால்களில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் இணைப்புகளும் உள்ளன. மேலும் இந்த மழைநீர் வடிகால்கள் 2 செ.மீ முதல் 3 செ.மீ அளவுக்கான மழைநீரை மட்டுமே கொண்டு செல்லும் நிலையில் உள்ளன.

தற்போது குறிப்பிட்ட ஒருநாளில் 6 மணி நேரத்துக்குள்ளாகவே 20 செ.மீ அளவிலான கனமழை பெய்ததன் காரணமாக புளியந்தோப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை காந்தி கால்வாய்க்கு கொண்டு செல்லும் அளவுக்கான கட்டமைப்பு இந்த மழைநீர் வடிகால்களில் இல்லை.

மேலும் கடந்த மாதம் பெய்த மழையின்போது புளியந்தோப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றவும், அடைப்புகளை தூர்வாரவும் மழைநீர் வடிகால்களின் மேற்பரப்பு உடைக்கப்பட்டுள்ளது.

எனவே, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டெமலஸ் சாலை, டிகாஸ்டர் சாலை ஆகிய பகுதிகளிலும் மற்றும் பல்வேறு சிறு தெருக்களிலும் புளியந்தோப்பு பகுதியின் புவியியல் மேற்பரப்புக்கு ஏற்ப மழைநீர் வடிகால்களை அதிக கொள்ளளவு மழைநீரை வெளியேற்றும் திறனுடன் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வடிகால்கள் கான்கிரீட் வடிகால்களாகவும் அதன் மேற்பரப்பில் திறக்கக்கூடிய வகையிலான கான்கிரீட் பலகைகளை கொண்டும் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டெமலஸ் சாலை, டிகாஸ்டர் சாலைகளில் அமைக்கப்படவுள்ள.

புளியந்தோப்பு பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசால் ரூ.7.10 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களில் மாநகராட்சி பொறியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தொடர் ஆய்வு மற்றும் வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று இவ்விடங்களிலும் இனிவரும் காலங்களில் மழைநீர் தேங்காவண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வடிகால்கள் கான்கிரீட் வடிகால்களாகவும் அதன் மேற்பரப்பில் திறக்கக்கூடிய வகையிலான கான்கிரீட் பலகைகளை கொண்டும் அமைக்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x