Published : 05 Dec 2021 04:07 AM
Last Updated : 05 Dec 2021 04:07 AM

‘இந்து தமிழ் திசை’ சார்பில் வீட்டு வசதி கண்காட்சி தொடக்கம்; வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களுக்கு தனி அறை வசதியுடன் புதிய வீடுகள்: கிரெடாய் சென்னை தலைவர் பதம் துகார் தகவல்

நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கிய ‘இந்து தமிழ் திசை’யின் சென்னை வீட்டு வசதி கண்காட்சியை தொடங்கி வைத்து பங்கேற்ற (இடமிருந்து வலம்) சுஹாஷினி குமரன், நடிகர் குமரன் தங்கராஜன், பாரத ஸ்டேட் வங்கி தலைமைப் பொதுமேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணா, கிரெடாய் சென்னை தலைவர் டி.பதம் துகார், ‘இந்து தமிழ் திசை’ வர்த்தகப் பிரிவு தலைவர் சங்கர் வி.சுப்பிரமணியம், யூனியன் பேங்க் ஆப் இந்தியா மண்டல துணைத் தலைவர் ஜிதேந்தர் மணிராம், பாரத ஸ்டேட் வங்கி துணைப் பொது மேலாளர் பி.எல்.ரவிக்குமார்.படம்: பு.க.பிரவீன்

சென்னை

‘இந்து தமிழ் திசை’ சார்பில் சென்னையில் 2 நாள் வீட்டு வசதி கண்காட்சி (Chennai Property Fair 2021) நேற்று தொடங்கியது. வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்கள், ஆன்லைனில் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் தனி அறை வசதியுடன் புதிய வீடுகளைக் கட்டித் தருவதாக கிரெடாய் சென்னை தலைவர் பதம் துகார் தெரிவித்தார்.

‘இந்து தமிழ் திசை’ சார்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் வீட்டு வசதி கண்காட்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. கிரெடாய் (இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பு) சென்னை தலைவர் டி.பதம் துகார், நடிகர் குமரன் தங்கராஜன், அவரது மனைவி சுஹாஷினி குமரன், பாரத ஸ்டேட் வங்கி தலைமைப் பொது மேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணா ஆகியோர் குத்துவிளக்கேற்றி இக்கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

இக்கண்காட்சியில் பட்ஜெட் வீடுகள், சொகுசு வில்லாக்கள், வரிசை வீடுகள், அடுக்குமாடி வீடுகள், டியூப்ளெக்ஸ் வீடுகள், வீட்டு மனைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் ஸ்டால்களை அமைத்துள்ளன. இந்த கண்காட்சியில் மனை அல்லது வீடுகளை புக்கிங் செய்வோருக்கு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சி குறித்து, கிரெடாய் சென்னை தலைவர் டி.பதம் துகார் கூறியதாவது:

கரோனா காலத்தில் பெரும்பாலானோர் இன்னமும் வீடுகளில் இருந்தேவேலை பார்க்கின்றனர். குழந்தைகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுகின்றன. கரோனா நோய்ப் பரவல் மனித உயிர்களுக்கு உத்தரவாதமற்ற நிலையை உருவாக்கிவிட்டது. அதனால், வாழ்நாளில் மிகப்பெரிய சொத்தாக கருதப்படும் வீடு வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

வீட்டில் எவ்வித தொந்தரவு இல்லாமல் அலுவலக வேலை பார்க்கவும், ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்கவும் ஏற்ற வகையில் அதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய வீடுகளில் தனி அறை கட்டித் தருகிறோம். ரூ.50 லட்சம் மற்றும் அதற்குகுறைவான விலையில் உள்ள வீடுகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் அத்தகைய வீடுகளை அதிக எண்ணிக்கையில் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாரத ஸ்டேட் வங்கி தலைமைப்பொதுமேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணா கூறும்போது, “வங்கிகள் பொதுமக்களுக்கு வீட்டுக் கடன்களை வழங்குவது மட்டுமின்றி, பில்டர்களுக்கும் தேவையான நிதியுதவிகளை அளித்து வருகிறது. தற்போது பில்டர்களுக்கான நிதியுதவி அளிப்பது அதிகரித்து வருகிறது. வீட்டுக் கடன்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தற்போது பெரிய வீடுகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். வீட்டில் இருந்து வேலை பார்ப்பதால் மக்களுக்கு பெரிய வீடுகள் தேவைப்படுகின்றன. வீட்டுக் கடன்களுக்கான வட்டியும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது” என்றார்.

நடிகர் குமரன் தங்கராஜன், அவரது மனைவி சுஹாஷினி குமரன் ஆகியோர் கூறும்போது, “கரோனாவால் பாதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் தொழில் தற்போது மீண்டு வரும் நிலையில், இத்தொழில் இயல்பு நிலைக்கு திரும்புவதை உணர்த்தும் வகையில் இக்கண்காட்சி அமைந்துள்ளது. கண்காட்சியில் ஸ்டால் அமைத்துள்ள நிறுவனங்களிடமும், அதைக் காண வந்த பொதுமக்களிடமும் அதற்கான ஆர்வம் இருப்பதைக் காண முடிகிறது” என்றனர். இக்கண்காட்சி இன்று காலை 10 மணிமுதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x