Published : 04 Dec 2021 03:08 AM
Last Updated : 04 Dec 2021 03:08 AM

தமிழகத்தில் மீண்டும் மழை வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவில் வெள்ளத் தணிப்பு திட்ட அறிக்கை: திருப்புகழ் தலைமையிலான குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புகள், அடுத்த முறை நடக்காமல் இருப்பதற்கான திட்ட அறிக்கைகளை விரைவாக தரவேண்டும் என்று சென்னை வெள்ளப்பெருக்கை தணித்தல் மற்றும் நிர்வகித்தல் குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சென்னை பெருநகர வெள்ளப் பெருக்கைத் தணித்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின்தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. தலைமைச் செயலர் இறையன்பு வரவேற்றார்.

சென்னை பெருநகர வெள்ளப் பெருக்கைத் தணித்தல் மற்றும் நிர்வகித்தலுக்கான ஆலோசனைக் குழு தலைவர் வெ.திருப்புகழ், வெள்ள நீர் தேங்குவதற்கான காரணங்களை விளக்கப் படங்களுடன்எடுத்துரைத்து, அதை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்த குழுவின் ஆலோசனைகளை தெரிவித்தார்.

இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

ஆட்சிக்கு வந்தபோது மிரட்டிய கரோனாவை அடக்கிய நிலையில், தற்போது ‘ஒமைக்ரான்’ மிரட்டுகிறது. இதற்கு மத்தியில் மழை, வெள்ளம். இப்படி தொடர்ச்சியாக பேரிடர்கள் வந்தாலும், அனைத்தையும் வெல்லும் திறன் படைத்ததாக தமிழக அரசு நிர்வாகம் உள்ளது.

முன்களப் பணியாளர்கள் அனைவரும் களத்தில் நின்ற காரணத்தால்தான் வரலாறு காணாத மழை பெய்தாலும் பாதிப்பு மிகமிககுறைவாக ஏற்பட்டுள்ளது. முன்கள பணியாளர்களோடு நானும் ஒரு பணியாளராகவே களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே திட்டமிடலை தொடங்கிவிட்டோம். அக்டோபர் தொடக்கத்திலேயே மழை தொடங்கிவிட்டது. அக்.25-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதிலேயே அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பத் தொடங்கின. நவ.9 முதல் 12 வரை, அதன்பிறகுநவ.17 முதல் 19 வரை நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாக பெய்த மழை, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மழை பெய்யும்போதே தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்தோம்.

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் எத்தகைய பெருமழையையும் சீரிய வகையில் எதிர்கொள்ளும் வகையில் உடனே செயல்படுத்த வேண்டிய விரிவான திட்டங்களை உடனே அரசுக்கு வழங்குங்கள்.

நீர் மேலாண்மை திட்டம்

சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உட்பட சென்னை வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நீண்டகாலத் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை வழங்க வேண்டும். நீர் மேலாண்மைக்கான சிறந்த செயல் திட்டத்தை பகுதி வாரியாகவும், துறை வாரியாகவும் வழங்க வேண்டும்.

தூத்துக்குடிக்கு சென்றபோது,அதிகாரிகளைவிட, அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு அதிகம் தெரிந்திருக்கிறது. 65 வயது பெண் ஒருவர், எங்கிருந்து வெள்ள நீர் வருகிறது, எப்படி வருகிறது, எங்கு அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தெளிவாக கூறினார்.

தென் சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் தியாகராயநகர் பகுதியில் 5, 6 நாட்கள் தண்ணீர் தொடர்ந்து தேங்கியதைப் போல, தூத்துக்குடியிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதாக கூறிகால்வாய்களை அடைத்ததால், தண்ணீர் தேங்கியது. இதை அங்குஉள்ள பெண்கள் எடுத்துக் கூறினர். எனவே, அதிகாரிகளும் அதைபுரிந்துகொண்டு, அதற்கேற்ப தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும்.

சென்னையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாதிரியான திட்டமிடுதல் தேவைப்படுகிறது. எனவே பகுதி வாரியாக, குறிப்பான ஆலோசனைகள், திட்டமிடுதல்கள் தேவை.இவற்றை உடனே செய்ய வேண்டும். சீக்கிரமாக அறிக்கை கொடுத்தால், விரைவாக திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம். கடந்த முறைஏற்பட்ட பாதிப்புகளை, அடுத்தமுறை நடக்காமல் தமிழக அரசுதடுத்து விட்டது என்ற பெயரை நாம் எடுத்தாக வேண்டும். எனவே, திட்ட அறிக்கையை விரைவாக துல்லியமாக, நடைமுறை சாத்தியம் உள்ள திட்டமாக தாருங்கள். இவ்வாறு முதல்வர் கூறினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x