Last Updated : 03 Dec, 2021 03:34 PM

 

Published : 03 Dec 2021 03:34 PM
Last Updated : 03 Dec 2021 03:34 PM

ஒமைக்ரான் பரவல்; புதுச்சேரியில் அதிநவீன ஆய்வகத்துடன் தனிப்பிரிவு தொடக்கம்: வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்குத் தடுப்பூசி சான்று கட்டாயம்

கர்நாடகாவில் ஒமைக்ரான் பரவலையடுத்து புதுச்சேரியில் அதிநவீன ஆய்வகத்துடன் தனிப்பிரிவு, அரசு மார்பக நோய் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்குத் தடுப்பூசி சான்று கட்டாயமாகவுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா பரவத் தொடங்கியது. கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும் இன்று வரை ஊரடங்கு நீடித்து வருகிறது. கடந்த 20 மாதத்தில் கரோனா படிப்படியாகக் குறைந்துள்ளது. தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை அதிகரித்ததால் மீண்டும் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதையடுத்து மீண்டும் புதுவையில் வழக்கமான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அண்டை மாநிலம், வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் புதுவையில் வார இறுதி நாட்களில் குவியத் தொடங்கினர். கனமழையின் காரணமாக கடந்த சில வாரமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருந்தது. புதுவைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் அதிக அளவு கர்நாடக மாநிலத்திலிருந்து வருகின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வார இறுதியில் புதுவைக்கு வருவது வாடிக்கையாக உள்ளது.

புதிய வகை கரோனாவான ஒமைக்ரான் உலகம் முழுவதும் 29 நாடுகளில் பரவத் தொடங்கியது. இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. கரோனா விதிமுறைகள், கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளனர். தடுப்பூசியை முழுமையாகச் செலுத்த நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கும் ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இத்தகைய சூழலில் வார இறுதி நாட்களைக் கொண்டாடப் புதுவையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவர். இது புதுவை மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் அரசு மார்பக நோய் மருத்துவமனையில் தனி வார்டு ஒமைக்ரானுக்கு அமைக்கப்பட்டுள்ளது. போதிய படுக்கைகளுடன் வென்டிலேட்டர், ஆக்சிஜன் வசதியுடன் வார்டு அமைக்கப்பட்டுள்ளது. ஐசியூவில் 10 படுக்கைகளும், அதிநவீன ஆய்வகமும் இங்கு உள்ளது. ஒரே நேரத்தில் நூறு பேருக்குப் பரிசோதனை செய்து இரண்டு மணி நேரத்தில் முடிவுகளைத் தெரிவிக்க முடியும். எல்லைப் பகுதிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் முன்னிலையில் தீவிரக் கண்காணிப்பு செய்யவும் திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே ஆளுநர் தமிழிசை, மாநில எல்லைகளில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிக்க வேண்டும். 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா என சோதனை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

எல்லைப் பகுதிகளில் தொற்று அறிகுறியுடன் வருவோரை உடனடியாக அரசு மார்பக நோய் மருத்துவமனைக்கு அழைத்து வரத் திட்டமிட்டுள்ளனர்.

இதையொட்டி மார்பகநோய் மருத்துவமனை கண்காணிப்பாளர் கோவிந்தராஜன் இன்று காலை மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஆலோசித்தார். அதன் பிறகு அவர் கூறுகையில், ''தேவையான அளவு படுக்கைகள், ஆய்வக வசதி அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. டாக்டர்கள், செவிலியர்கள் செல்லத் தனி வழியும், சிகிச்சைக்கு வருவோருக்குத் தனி வழியும் அமைக்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டார்.

சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு பேசும்போது, “முன்னேற்பாடுகள் ஏற்பாடு செய்து வருகிறோம். 160 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கரோனா பாதிக்கப்பட்டோர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோரையும் இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

எல்லைப் பகுதிகளில் விரைவில் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து வருவோரைப் பரிசோதிப்பதுடன், தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழையும் கேட்க உள்ளோம். ஆப்பிரிக்காவிலிருந்து வந்த மூவருக்கும் பரிசோதனையில் நெகட்டிவ் வந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x