Published : 03 Dec 2021 03:07 AM
Last Updated : 03 Dec 2021 03:07 AM

பக்கிங்ஹாம் கால்வாய் வெள்ளப் பெருக்கால் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான உப்பளம் சேதம்

திருப்போரூர் - நெம்மேலி செல்லும் சாலையோரம் உள்ள உப்பளங்கள் பக்கிங்ஹாம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தண்ணீரில் முழ்கியுள்ளன.

திருப்போரூர்

திருப்போரூர் - நெம்மேலி செல்லும் சாலையில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான உப்பளம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் - நெம்மேலி செல்லும் சாலையில் பக்கிங்ஹாம் கால்வாயையொட்டி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அரசு நிலங்கள் அமைந்துள்ளன. இதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனம், குத்தகை அடிப்படையில் நிலங்களைப் பெற்று உப்பளங்கள் அமைத்து உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், குத்தகைக் காலம் நிறைவடைந்ததால் கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்தப் பகுதியில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால், உப்பளங்கள் அமைக்கப்பட்ட நிலங்கள் தரிசாக காட்சியளித்து வந்தன. இந்நிலையில், தமிழ்நாடு சால்ட்கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தப்பகுதியில் உப்பளம் அமைப்பதற்காக வருவாய்த் துறை மூலம் 3,010 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை, 20 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் பெற்றுஉள்ளது. இதன்பேரில், முதற்கட்டமாக 500 ஏக்கர் பரப்பளவில் உப்பளம் அமைக்கும் பணிகளை அந்நிறுவனம் மேற்கொண்டது.

இதில், நிலங்கள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சமன்படுத்தி 50 மீட்டர் அகலம் மற்றும் 50 மீட்டர் நீளம் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் தண்ணீர் தேக்கும் வகையில் கரைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்தி உப்பு தயாரிப்புக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் பெய்த கனமழையால் பக்கிங்ஹாம் கால்வாயில் நீர்வரத்து அதிகரித்தது.

இதனால், கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரையோர கிராமங்களில் புகுந்தது. இதில், திருப்போரூர் -நெம்மேலி சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த உப்பளம் முழுவதும் வெள்ளத்தில் முழ்கி சேதமடைந்துள்ளது. மேலும், வெள்ளநீர் வடிந்தாலும் மீண்டும் அவற்றை சீரமைத்து உப்பு உற்பத்திக்கு தயார்படுத்த பல மாதங்களாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x