Published : 02 Dec 2021 03:40 PM
Last Updated : 02 Dec 2021 03:40 PM

அனைத்து மாவட்டங்களிலும் சமத்துவபுரங்கள்: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை

சென்னையில் இன்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் மாவட்ட திட்ட இயக்குநர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

"ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் சென்னை ஊரக வளர்ச்சி இயக்குனரகத்தில் 01.12.2021 நேற்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலர் அமுதா. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் பிரவீன் பி. நாயர், கூடுதல் இயக்குனர்கள், முதன்மைப் பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆய்வுக் கூட்டத்தின் போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மாவட்டங்களில் பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து கீழ்க்கண்ட அறிவுரைகளை வழங்கினார்.

தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்த பெருமழை, தொடர்ந்த வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை சீற்ற நிகழ்வுகளில் நமது அலுவலர்கள் மேற்கொண்ட சீர்மிகு பணிகளை பாராட்டியதோடு, தொடர்ந்து மக்களின் சிரமங்களைப் போக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது. ஊரக பகுதிகளின், நீர் ஆதாரங்களான குளங்கள், ஏரிகள் மற்றும் கால்வாய்களை சீரமைத்து பாதுகாத்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இவ்வரசு பொறுப்பேற்றது முதல் கோவிட்-19 எனும் கொரோனா பெருந்தொற்றினை இவ்வரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளாலும், மாநில மற்றும் மாவட்ட அளவில் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகள் மூலமாகவும் தற்போது இந்நோய் கட்டுக்குள் வந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும், முதல்வர் ஆணைப்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அனைத்து அலுவர்களும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் தெரிவிக்கப்பட்டது.

ஊரக வளர்ச்சித் துறையானது, ஊரகப் பகுதிகளின் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்குகள், சாலைகள், பள்ளிக்கட்டிடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை ஏற்படுத்துவது, ஊரக மக்களுக்கான வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் பணிகளை மேற்கொள்ளுதல், சுற்றுப்புறத் தூய்மையை பராமரித்தல், தனிநபர் சுகாதாரம் பேணுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளை அனைத்து நிலை மாவட்ட அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து செயல்படுத்தி, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட அறிவுறுத்தப்பட்டது.

மேலும், ஊரகப்பகுதிகளில் போதுமான அளவு குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்யவும், 100 சதவீதம் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்யவும், செயல்பாட்டில் இல்லாத தெருவிளக்குகளை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது.

தந்தை பெரியாரின் சமூக சமத்துவ கொள்கையை பரப்பும் பொருட்டு, அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் என்ற நோக்கத்திலும் சமூக நீதியை உறுதிப்படுத்தும் வண்ணமும் ஊரகப் பகுதிகளில் புதிய பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் (நீலகிரி மாவட்டம் நீங்கலாக,) சமத்துவபுரங்கள் அமைக்க தகுதியான இடத்தை விரைவில் தேர்வு செய்ய தெரிவிக்கப்பட்டது.

மேலும், 2021-22ம் ஆண்டு முதல் 2025-26ம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் கிராமங்களை முழுமையான வளர்ச்சி அடைந்த கிராமங்களாக மாற்றுவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை படிப்படியாக ஏற்படுத்திட உருவாக்கப்பட்டுள்ள அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம்-II நடப்பாண்டில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 2,505 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை மாவட்ட அளவிலான அலுவலர்கள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது.

மேலும், நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ள முந்தைய அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நூலகங்களை புதுப்பிக்கும் திட்டம், நமக்கு நாமே திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொண்டு, பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் தனி நபர் அல்லது சமுதாயப் பணிகள் எடுக்கப்பட்டு தொடர்ச்சியாக மக்களுக்கு பணிகள் வழங்க அறிவுறுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து பொருட்கூறு பணிகளும் விரைந்து செயல்படுத்தப்படவேண்டும். அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொருட்கூறு கட்டுமான பணிகள் (Priority Works) பரவலாக கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.

பிரதம மந்திரி கிராம குடியிருப்புத் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் அனைத்து வீடுகளையும் விரைந்து முடிந்திட அறிவுறுத்தப்பட்டது. மேலும், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், ஜல் ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மைத் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளுர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், ரூர்பன் போன்ற திட்டங்களில் எடுக்கப்பட்டு முன்னேற்றத்திலுள்ள அனைத்து பணிகளையும் இந்த நிதியாண்டு இறுதிக்குள் முடித்திட தெரிவிக்கப்பட்டது.

மேலும், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றிட தெரிவிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளது.

தற்போது நடைபெறும் திட்டங்கள் மற்றும் இத்துறை மூலம் இனி வருங்காலங்களில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் அனைத்தையும் விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்திட அனைத்து அலுவலர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்."

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x