Published : 02 Dec 2021 03:07 AM
Last Updated : 02 Dec 2021 03:07 AM

புதுச்சேரி கன்னியக்கோயிலில் விசில் அடித்து அழைத்ததும் பறந்து வந்து பழத்தை சாப்பிடும் வவ்வால்கள்

புதுச்சேரி அடுத்த கன்னியக் கோயிலில் விசில் அடித்து அழைத்தவுடன் பறந்து வந்து கையில் இருக்கும் பழத்தை வவ்வால்கள் சாப்பிட்டுவிட்டு செல்வது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கன்னியக்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை கிருஷ்ணன். அதேபகுதியில் டேங்க் ஆப்ரேட்டாக உள்ளார். இவருக்கு புதுச்சேரி - கடலூர் சாலையில் சொந்தமாக வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 5 தேன்பழம் மரங்கள் இருந்தன. இதில் காய்க்கும் பழங்களை அணில்கள், வவ்வால்கள் வந்து சாப்பிடுவது உண்டு. இதை செந்தாமரை கிருஷ்ணன் தினமும் கண்காணித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த தேன்பழம் மரங்கள் சமீபத்தில் வீசிய காற்றில் சாய்ந்தன. இதனால் வழக்கம்போல் வந்த வவ்வால்கள் அந்த பகுதியில் பழம் கிடைக்காமல் சுற்றித் திரிந்தன. இதைக்கண்ட செந்தாமரை கிருஷ்ணன் அங்குள்ள மதில் சுவர் மற்றும் காரின் மீது வாழைப்பழங்களை வைத்துள்ளார். அதை வவ்வால்கள் சாப்பிட்டு சென்றுள்ளன.

இதையடுத்து அவர் தனது கையில் பழத்தை வைத்துக்கொண்டு விசில் அடித்து அழைத்துள்ளார். செந்தாமரை கிருஷ்ணன் அழைத்தவுடன் வவ்வால்கள் ஒவ்வொன்றாக வந்து அமர்ந்துகொண்டு அவரது கையில் இருந்த பழத்தை நிதானமாக சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளன. இதை அவர் தினமும் கடைபிடித்த நிலையில், வவ்வால்களும் வந்து சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. செந்தாமரை கிருஷ்ணனின் இந்த செயலை அவரது நண்பர் ஒருவர் வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் வியந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக செந்தாமரை கிருஷ்ணன் கூறும்போது, ‘‘தேன்பழம் மரங்கள் சாய்ந்தவுடன் அங்குள்ள மதில் சுவர், காரின் மீது பழங்களை வைத்தேன். அதனை வவ்வால்கள் வந்து சாப்பிட்டுவிட்டு சென்றன. ஒருநாள் தனது கையில் வாழைப்பழம் ஒன்றை வைத்துகொண்டு விசில் அடித்து அழைத்து சோதித்து பார்த்தேன். நான் அழைத்தவுடன் வவ்வால்கள் பயமின்றி ஒவ்வொன்றாக வந்து கையில் அமர்ந்துகொண்டு நிதானமாக பழத்தை சாப்பிட்டுவிட்டு சென்றன. இது என்னை வியப்படைய செய்தது. இதனால் தினமும் அவைகளுக்கு பழம் கொடுக்க முடிவெடுத்து தொடர்ந்து கொடுத்து வருகிறேன். ஆரம்பத்தில் விசில் அடித்தவுடன் வந்த வவ்வால்கள் தற்போது என்னை பார்த்தவுடன் வந்துவிடுகின்றன. எவ்வளவு பேர் அங்கு இருந்தாலும் பயமின்றி கையில் வைத்திருக்கும் பழத்தையும் பொறுமையாக சாப்பிட்டுவிட்டு செல்கின்றன. இதனால் வவ்வால்களின் தினசரி நடவடிக்கைகள் எனக்கு அத்துபடியாகிவிட்டது’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x