Published : 28 Nov 2021 03:06 AM
Last Updated : 28 Nov 2021 03:06 AM

நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது; 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழை: சென்னை முடங்கியது- தஞ்சையில் வீடுகள் சேதம்

வங்கக் கடலில் நாளை (நவ.29) தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் வட கடலோரப் பகுதிகளில் உள்ள சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே தொடர் மழையால் தலைநகர் சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தஞ்சையில் மழைக்கு 159 வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளன. மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு ஒரேநாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதால் வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் கடலோர மாவட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் எச்சரித்துள்ளன.

இதனிடையே தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 28, 29, 30 மற்றும் டிச. 1-ம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (நவ.29) தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக 29, 30-ம் தேதிகளில் அந்தமான் கடற்பகுதிகளில் சூறாவளி காற்றும் டிசம்பர் 1-ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடற்பகுதிகள் ஆகியவற்றில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் இடையிடையே 60 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் பெய்துவரும் தொடர்மழையால் பல்வேறு பகுதி களில் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 650-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். தியாகராயநகரில் ஜி.என்.செட்டி சாலை, டாக்டர் நாயர் சாலை, ஆழ்வார்பேட்டை பாரதிதாசன் சாலை, புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் எல்பி சாலை, கே.கே.நகர், வடபழனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது. ஒருசில சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பெரும்பாலான சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியது.

புளியந்தோப்பு, திரு.வி.க.நகர் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். தேங்கிய மழை நீரை விரைவாக வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஒரேநாளில் 8 பேர் உயிரிழப்பு

இதனிடையே நவ.26-ம் தேதி ஒரு நாள் மட்டும் மழையால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 344 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 2,205 குடிசைகள், 273 வீடுகள் சேதமடைந்துள்ளதாக வருவாய்த் துறை அமைச் சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரி வித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் பரவலாக பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் மாவட்டத்தில் 123 குடிசை வீடுகள், 36 ஓட்டு வீடுகள் என 159 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதேபோல் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீராலும், காட்டாற்று ஓடைகள் நிரம்பி ஓடுவதாலும், தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் அணையைத் தாண்டி நேற்று காலை 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் கலந்தது. தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை யில் தெற்கு ஆத்தூர் அருகே உள்ள வரண்டியவேல் தரைப் பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x