Published : 27 Nov 2021 03:09 AM
Last Updated : 27 Nov 2021 03:09 AM

நெல்லை மாவட்டத்தில் கனமழையால் வீடு இடிந்து குழந்தை மரணம்: தாமிரபரணி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழையால் களக்காட்டில் வீடு இடிந்து 3 வயது குழந்தை உயிரிழந்தது. தாமிரபரணி கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத் தில் நேற்று காலை 8 மணி யுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட் டையில் 107 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பலத்த மழையால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு கால்வாய்கள் நிரம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

திருநெல்வேலி அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கிருந்து 60-க்கும் மேற்பட்டவர்களை தீயணைப்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் மீட்டு அப்பகுதியிலுள்ள முகாமில் தங்க வைத்துள்ளனர். இதுபோல், பேட்டை நரிக்குறவர் காலனி, பட்டன்கல்லூர் பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததை அடுத்து, அங்கிருந்து 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி டவுன் காட்சி மண்டபம் பகுதி முழுக்க குளம்போல் தண்ணீர் தேங்கியிருக்கிறது. இங்குள்ள கால்வாயை தூர்வாரி தயார் நிலையில் வைக்கவில்லை. அத்துடன் ஆக்கிரமிப்புகள் அதிகரித் துள்ளதாலும் கால்வாய் நிரம்பி தண்ணீர் தாழ்வான பகுதிகளை சூழ்ந்துள்ளது. காட்சி மண்டபம் பகுதி வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள் ளது. இங்குள்ள முகமதுஅலி தெரு, காஜா பீடி தெரு, மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல தெருக்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. டவுன் சந்திப்பிள்ளையார் கோயில் சாலையில் நேற்று 2-வது நாளாக குளம்போல் தண்ணீர் தேங்கியிருந்தது.

கனமழையால் மூலைக்கரைப் பட்டி அருகே ரெட்டார்குளம் கிராமத்தில் தரைப்பாலம் மூழ்கியது. நாங்குநேரியான் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் களக்காடு- சிதம்பராபுரம் சாலையிலுள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் நாங்கு நேரியான் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக களக்காட்டில் பல்வேறு தெருக்களில் வெள்ளம் புகுந்தது.

கனமழையால் தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் உள்ளிட்ட அணைகளில் இருந்து பெருமள வுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், காட்டாற்று வெள்ள மும் கலப்பதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆற்றின் கரையில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. நேற்று காலையில் பாபநாசம் அணையிலிருந்து விநாடிக்கு 1,676 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

களக்காடு அருகேயுள்ள கீழபத்தையை சேர்ந்த சுரேஷ்- சூர்யா தம்பதியருக்கு 3 வயதில் அருள்பேபி என்ற மகள் இருந்தார். நேற்று முன்தினம் இரவில் 3 பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். களக்காடு பகுதியில் பெய்த கனமழையால் நள்ளிரவில் வீட்டின் சுவர் இடிந்து அவர்கள் 3 பேர் மீதும் விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பலத்த காயமடைந்த சுரேஷ், சூர்யா ஆகியோர் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இது குறித்து களக்காடு போலீஸார் விசாரிக்கிறார்கள். திருநெல்வேலி அருகே கண்டியப்பேரி இலந்தகுளத் தில் அழகர் என்பவரது வீட்டின் சுவரும் இடிந்து வெளிப்புறமாக விழுந்ததால் வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங் களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 81, சேர்வலாறு- 50, மணிமுத்தாறு- 94.6, நம்பி யாறு- 80, கொடுமுடியாறு- 70, அம்பை- 79, சேரன்மகா தேவி- 84.80, நாங்குநேரி- 64,ராதாபுரம்- 54, களக்காடு- 96.2, மூ பாளையங் கோட்டை- 107, திருநெல்வேலி- 76.20.

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுப்பு

தொடர் கன மழையின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x