Published : 26 Nov 2021 03:07 AM
Last Updated : 26 Nov 2021 03:07 AM

அம்மா உணவகம் போல தமிழகத்தில் கூடுதலாக 500 ‘கலைஞர் உணவகங்கள்’ - டெல்லி கூட்டத்தில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை

தமிழகத்தில் அம்மா உணவகம் போல, ‘கலைஞர் உணவகம்’ என்ற பெயரில் கூடுதலாக 500 சமுதாய உணவகங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

இந்தியாவில் மாதிரி சமுதாயசமையல் கூடம் என்ற திட்டத்தைசெயல்படுத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் மத்தியஅமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்று பேசியதாவது:

தமிழகத்தில் 2007-ல் முதல்வர் கருணாநிதியால் சிறப்பு பொதுவிநியோகத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் கீழ்,அனைத்து குடும்ப அட்டைக்கும் மாதம் ஒரு கிலோ துவரம்பருப்பு,ஒரு லிட்டர் சமையல் எண்ணெய்மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய அரசு பதவியேற்றதும் தமிழகத்தில் உள்ள 2.09 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருட்கள் தொகுப்பை ரூ.978 கோடி செலவிலும், தலா ரூ.4,000 ரொக்கத்தையும் கரோனா நிவாரணமாக வழங்கியது. வரும் பொங்கலை முன்னிட்டு 2022 ஜனவரியில் 21 உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,161 கோடியில் வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசு 650 சமூக உணவகங்களை அம்மா உணவகம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம்நடத்தி வருகிறது. இந்த உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல், பல்வகை சாதங்கள் ரூ.5-க்கும், தயிர் சாதம், 2 சப்பாத்தி பருப்புடன் ரூ.3-க்கும் வழங்கப்படுகின்றன. கடந்த ஜூன் 1முதல் நவ.18 வரை 15 கோடிக்கும் மேற்பட்டோர் இந்த உணவகங்கள் மூலம் பயனடைந்துள்ளனர். 30,490 கட்டுமானத் தொழிலாளர்கள் பயன் பெற்றுள்ளனர்.

கரோனா காலத்தில் இந்த உணவகங்களில் கட்டணமின்றி உணவு வழங்கப்படுகிறது. வருங்காலத்தில் இதேபோல, கூடுதலாக500 சமுதாய உணவகங்கள் ‘கலைஞர் உணவகம்’ என்ற பெயரில்அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் செப்டம்பர் மாதம் வரை 3,227 டன் அரிசியும், 362 டன் கோதுமையும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு உணவகத்துக்கு சராசரியாக மாதத்துக்கு ரூ.3.5 லட்சம் செலவிடப்படுகிறது. இத்திட்டத்தை வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தவும், விரிவுபடுத்தவும் மத்திய அரசு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 100 சதவீத நிதியுதவி வழங்க வேண்டும்.

கடந்த செப்.21-ம் தேதி மத்திய அமைச்சரை நேரில் சந்தித்த போது, கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்க விடுத்த கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் அரைக்கப்படும் பச்சரிசியில் 1 லட்சம் டன்னை அண்டை மாநிலங்களுக்கு தந்து, அதற்கு ஈடாக 1 லட்சம் டன் புழுங்கல் அரிசி வழங்க வேண்டும் என்றகோரிக்கையை விரைவாக நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு மற்றும் பிற மாநில அரசுகளுடனும் இணைந்து, நாட்டை பட்டினி மற்றும் சத்து குறைவில்லா நாடாகமாற்ற தமிழக அரசு துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறினார். உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ராஜாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x