Published : 26 Nov 2021 03:08 AM
Last Updated : 26 Nov 2021 03:08 AM

தக்காளி விலை குறையத் தொடங்கியது: கோயம்பேட்டில் ரூ.80-க்கு விற்பனை

சென்னையில் தக்காளியின் விலை குறையத் தொடங்கியது. கோயம்பேட்டில் மொத்த விலையில் கிலோ ரூ.80-க்கும், பண்ணை பசுமை கடைகளில் சில்லறை விலையில் கிலோ ரூ.75-க்கும் விற்கப்பட்டு வருகிறது.

கோயம்பேடு சந்தைக்கு கடந்த இரு வாரங்களாக 30 லோடு தக்காளி வந்த நிலையில், நேற்று 45 லோடாக அதிகரித்தது. மேலும் பண்ணை பசுமை கடைகளில் விலை மலிவாக விற்கப்படுவதால், கோயம்பேடு சந்தையில் நேற்று காலை தக்காளி கிலோ ரூ.80 ஆக குறைந்திருந்தது. பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.75 ஆக குறைந்திருந்தது. சில்லறை விற்பனை சந்தைகளிலும் 2-ம் தர தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்கப்பட்டது.

பண்ணை பசுமை கடைகளில் மலிவு விலையில் கிடைக்கும் தக்காளி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பண்ணை பசுமை கடையில் மற்ற காய்கறிகளின் விலையும் குறைவாக இருந்ததால், அவற்றையும் பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.

நேற்று கடலூர், நீலகிரி போன்ற பகுதிகளில் உள்ளூர் விவசாயிகள் விளைவித்த தக்காளி கிலோ ரூ.55-க்கு விற்கப்பட்டது. இதனிடையே காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் விதமாக நகர்ப்புறங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பிட்ட நியாயவிலைக் கடைகளில் தக்காளி மற்றும் காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

இது விரைவில் அமலுக்கு வரும் நிலையில், தக்காளி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வியாபாரிகள் கோரிக்கை

இந்நிலையில் கோயம்பேடு தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் சிவா என்பவர் உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பாக ஆஜராகி முறையீடு செய்தார்.

அதில், “கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மே 5-ம் தேதி முதல் கோயம்பேடு மொத்த காய்கறி வளாகம் மூடப்பட்டது. பின்னர் அந்த மார்க்கெட் அதே ஆண்டு செப்.28 முதல் மீண்டும் திறக்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் 86 சென்ட் நிலப்பரப்பில் தக்காளி கூடைகளை இறக்கி, ஏற்றும் மைதானம் இன்னும் திறக்கப்படவில்லை. தக்காளியுடன் ஏற்றி வரப்பட்ட 11 லாரிகளை அந்த மைதானத்துக்குள் வைத்து அதிகாரிகள் பூட்டிவிட்டதால் தக்காளிகள் அழுகி வீணாகின. பின்னர் பல நாட்களுக்குப் பிறகு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த லாரிகள் வெளியே எடுக்கப்பட்டன. இதனால் வெளி மாநில தக்காளி லாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருவதில்லை.

தக்காளி விலை தாறுமாறாக உயர இதுவும் ஒரு காரணம். எனவே இந்த மைதானத்தை திறந்து அங்கு தக்காளி லாரிகளில் தக்காளியை ஏற்றி, இறக்க அனுமதித்தால் நாளை (இன்று) முதல் ஒரு கிலோ தக்காளி அப்போதைய நிலைக்கு ஏற்ப ரூ. 40 வரை விற்கப்படும். எனவே இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு நாளை (இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்,என உறுதியளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x