Published : 24 Nov 2021 03:07 AM
Last Updated : 24 Nov 2021 03:07 AM

தொலைத்தொடர்பு கருவிகள், ஏவுகணைகளுடன் நவீன தொழில்நுட்பத்தில் ‘ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்’ போர்க் கப்பல்: சர்வதேச தரத்துக்கு இணையாக உள்நாட்டில் வடிவமைப்பு

இந்தியக் கடற்படையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ‘ஐஎன்ஸ் விசாகப்பட்டினம்’ என்ற போர்க் கப்பல், நவீன தொழில்நுட்பத்தை பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்துக்கு இணையாக, முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கடற்படையில் புதிதாக ‘ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்’ என்ற போர்க் கப்பல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இக்கப்பலை நேற்று முன்தினம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மும்பையில் தயாரிப்பு

மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில், இக்கப்பலை தயாரிக்கும் பணி கடந்த 2013, அக்.13-ல் தொடங்கப்பட்டது. 2015, ஏப்.15-ல் இக்கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது. அப்போது,‘ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்’ என இக்கப்பலுக்கு பெயர் சூட்டப்பட்டது.

சர்வதேச தரத்துக்கு இணையாக, முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இக்கப்பல், பல்வேறு கட்டசோதனைகளுக்குப் பிறகு முறைப்படி இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

164 மீட்டர் நீளமும், 74 ஆயிரம் டன் எடையும் கொண்ட இந்த போர்க் கப்பலில் நவீன ரக ஆயுதங்கள், தொலைத்தொடர்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, விமானங்கள், கப்பல்களைத் தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்த நவீன ரக பிரமோஸ், பாரக் ஏவுகணைகள், 76 எம்எம், எஸ்ஆர்ஜிஎம் நடுத்தர ரக துப்பாக்கிகள்,4 ஏ.கே.630 ரக துப்பாக்கிகள்,அருகில் உள்ள இலக்குகளை தாக்குவதற்காக எஸ்ஆர்சிஜி ரகதுப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், நீர்மூழ்கி கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ராக்கெட்கள், உளவு கருவிகளும், குறிப்பாக நீர்மூழ்கி அதிகன டார்பிடோக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

அத்துடன், நவீன மேம்படுத்தப்பட்ட ஆர்ஏடபிள்யூ 02 எம்கே-3கண்காணிப்பு ரேடார்கள், எஸ்எஸ்ஆர் ரக ரேடார்கள், எலக்ட்ரானிக் கண்காணிப்பு கருவிகள், சோனார் கருவிகள் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன. 2 அதிநவீன போர் ஹெலிகாப்டர்களும் இக்கப்பலில் உள்ளன.

இக் கப்பலில் சக்திவாய்ந்த ‘கோகாக்’ என்ற உந்துசக்தி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதால், 30 நாட்டிக்கல் மைல் வேகத்துக்கும் கூடுதல் வேகத்தில் செலுத்தமுடியும். 4.6 மெகாவாட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், கப்பலின் அனைத்து மின்தேவைகளும் பூர்த்தி செய்யப்படும். ஆந்திர மாநில விலங்கானகரும்புலி இக்கப்பலின் முகப்புபகுதியில் உள்ள இலச்சினையில் (லோகோ) இடம் பெற்றுள்ளது. எப்போதும் எச்சரிக்கையாகவும், அதிவேகத்தில் ஓடும் திறனும் கொண்டதை குறிக்கும் வகையில், இப்புலியின் சின்னம் இடம் பெற்றுள்ளது.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆழ்கடலைத் தாண்டிய தமிழர் தொல்குடி

தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத காலத்திலேயே கப்பல் கட்டும் துறையில் தமிழர்கள் சிறந்து விளங்கினர். உலகின் மிகப் பழமையான ‘திருக்கோணமலை கப்பல்’ 1817-ல் இந்தியாவில் கட்டப்பட்டது.

தமிழர்களின் தொல்குடியில் தோன்றிய பாண்டியமன்னனின் அரச தூதர், 2,000 ஆண்டுகளுக்குமுன்பே இரட்டை மீன்கள் பொறிக்கப்பட்ட பாண்டியநாட்டுக் கொடிகளைத் தாங்கிய நாவாய் மூலம் ஆயிரக்கணக்கான கல் தொலைவு ஆழ்கடல் தாண்டி ரோம் நாட்டு அரசர் அகஸ்டஸைச் சந்தித்து வாணிப ஒப்பந்தம் செய்துவிட்டுத் திரும்பினர்.

தமிழர்கள் கட்டிய பெரிய நாவாய்கள் புலி, மீன், வில் முதலிய சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடிகளோடு ஆழ்கடல் அனைத்தையும் தாண்டி வந்தன. அவர்கள் திசைகாட்டும் கருவியையும் மணிகாட்டும் கருவியையும் வைத்திருந்தனர்.

நம் பரதவர்களே இன்றைய கப்பல் கட்டும்தொழிலுக்கு முன்னோடிகள். பல்லாண்டுகளாய் பலபடசிந்தித்துப் பயின்று மரம், கட்டுமரம், மிதவை, தெப்பம் போன்றவற்றைச் செய்து நீரைக் கடக்க வழி கண்டனர்.

மற்ற நாட்டவர் செய்யாத முறையில் ஒன்றின்மீதுஒன்றாக மூன்றடுக்கு மரங்களை இணைத்துக் கப்பல் கட்டினர் தமிழ்நாட்டுக் கப்பற் கலை நிபுணர்கள். இரும்பு ஆணிகளைக் கொண்டு அறைந்தால்கடல் நீரால் துருவேறி கப்பலில் துவாரம் விழுந்துவிடும் என்பதால் அவற்றைப் பயன்படுத்தாமலேயே கப்பல் கட்டினார்கள்.

சிறந்த மாலுமியான இத்தாலியைச் சேர்ந்த மார்கோபோலோ 13-ம் நூற்றாண்டையடுத்து இந்தியாவுக்குக் கப்பலில் வந்தார். தமிழ்நாட்டுக் கப்பல்கள் குறித்து, “தமிழ்நாட்டுக் கப்பல்கள் தேவதாரு மரத்தால் கட்டப்பட்டவை. அடிப்பகுதியில் சுண்ணாம்பும் சணலும் கலந்து அரைத்து, எண்ணெய் சேர்த்து நெய்போலாக்கிப் பூசிவிடுகிறார்கள். அது நன்றாக ஒட்டி பசைத்தன்மையைப் பாதுகாக்கிறது” என்று வியந்து பாராட்டியுள்ளார்.

“பிரிட்டிஷ்காரர்கள் கட்டிய கப்பலை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மராமத்து செய்தே தீர வேண்டும். ஆனால், தமிழர்கள் கட்டிய கப்பல்கள் 50 ஆண்டுகளானாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை” என்று லெப்டினென்ட் வாக்கர் என்கிற ஆங்கிலேயர் 1811-ல் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்கள் மிகத் தொன்மையான காலத்திலேயே வானியல், நீரியல் அறிவில் சிறந்துவிளங்கினர். கடலின் நீரோட்டங்களையும், மீன்கள் எழுப்பும் ஒலிகளையும், கடற்பறவைகளின் போக்கையும்,கடல் நீரின் தட்பவெப்ப நிலையையும், வின்மீண்களின் நிலையையும் கொண்டு காற்று, மழை, புயல் போன்றவற்றைக் கணித்தனர்.

வணிகர்கள் பயன்படுத்த சரக்கேற்றும் கப்பல்கள், மக்களுக்காக பிரயாணக் கப்பல்கள், மன்னர்கள் செல்ல அலங்காரக் கலங்கள் என்று பல்வேறு விதமான கப்பல்களைத் தமிழர்கள் வடிவமைத்தனர்.

- சாத்தான்குளம் அ.ராகவன் எழுதிய‘நம் நாட்டுக் கப்பற் கலை’ நூலில் இருந்து.

இந்நூலுக்கு அப்போதைய பொதுப்பணி - போக்குவரத்துத் துறை அமைச்சர் மு.கருணாநிதி எழுதிய முன்னுரையில் ‘வங்கம், நாவாய், அம்பி, தோணி, புணை போன்ற நீரைக் கடக்கும் சாதனங்களும் அவற்றை ஓட்டும் மீகாமன் என்னும் மாலுமிகளும் நள்ளிரவிலும் ஆழ்கடலிலும் கரைகளை அறிந்து ஓட்டுவதற்கென்றே கட்டப்பட்ட கலங்கரைவிளக்கங்களும் பழங்காலத்திலேயே தமிழகத்தில் இருந்த உண்மையை மறுப்பார் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x