Published : 22 Nov 2021 03:06 AM
Last Updated : 22 Nov 2021 03:06 AM

நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்: திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான சட்டம் இயற்ற வேண்டும் என்று திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி திமுக எம்.பி.க்கள் கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுகமகளிரணிச் செயலாளர் கனிமொழி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும், எம்.பி.க்கள் அனைவரும் ஒரு நிமிடம் எழுந்துநின்று, வேளாண் சட்டங்களுக்கு எதிரான தொடர் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் திமுக எம்.பி.க்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், என்னென்ன பிரச்சினைகளை எழுப்ப வேண்டும் என்பது குறித்துமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகள் வழங்கினார்.

வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நீட் தேர்வு, குடியுரிமைச் சட்டம், புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றையும் ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் உறுதியுடன் குரல் கொடுக்க வேண்டும். அண்டை மாநிலங்கள் உடனான நதிநீர் பிரச்சினைகள், மழை, வெள்ள நிவாரணம், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, தமிழகத்துக்கு வரவேண்டிய நிதிப் பங்கீடு, மீனவர்கள் விவகாரம் உள்ளிட்ட தமிழகத்தின் நலன் சார்ந்த பிரச்சினைகள எழுப்ப வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் ‘இந்துதமிழ்’ நாளிதழிடம் தெரிவித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

மத்திய பாஜக அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் தொடக்கம் முதலே திமுக எதிர்த்து வந்தது. கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து திமுக தலைவர் போராட்டங்களை நடத்தியிருக்கிறார். அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்துபோராட்டங்களில் பங்கேற்று, விவசாயிகள் போராட்டத்துக்கு தொடக்கத்தில் இருந்தே திமுகஆதரவு தெரிவித்து வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சியாக இருந்தபோதும், ஆளுங்கட்சியான பிறகும் விவசாயிகளின் போராட்டத்தை திமுக ஆதரித்தது.

இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் மோடி அறி வித்துள்ளார். இதன்மூலம் அறவழிப் போராட்டத்தை வெற்றி அடையச் செய்த விவசாயிகளுக்கு பாராட்டுகள். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டம் தொடங்கும் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் அறிவிப்பை சட்டமாக நிறைவேற்றவேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x