Published : 18 Mar 2016 03:31 PM
Last Updated : 18 Mar 2016 03:31 PM

தமிழகத்தில் உள்ள அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப கருத்துக்கணிப்பு: ராமதாஸ் கண்டனம்

தமிழகத்தில் உள்ள அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப கருத்துக்கணிப்பு நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இலங்கையில் நடைபெற்ற போரின் போது உயிர் பிழைக்கும் நோக்குடன் தமிழகத்திற்கு அகதிகளாக வந்த 2 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் அகதிகள் முகாம்களிலும், அவற்றுக்கு வெளியேயும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை அணுகும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் 3 பக்கங்கள் கொண்ட வினாப் பட்டியலைக் கொடுத்து அவற்றுக்கான பதில்களை பெற்று பதிவு செய்து செல்கின்றனர்.

இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனுக்காகத் தான் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும் உண்மையான நோக்கம் அதுவல்ல என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த பட்டியலில் பல்வேறு வினாக்கள் இடம் பெற்றிருந்தாலும் அவற்றில் முதன்மையாக இடம் பெற்றிருக்கும் வினாக்கள் அகதிகளை அவர்களின் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைப்பது பற்றியவைதான். இந்நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

இந்த ஆய்வை தொண்டு நிறுவனம் தன்னிச்சையாக நடத்த வாய்ப்பில்லை. மத்திய உளவுத்துறையின் சார்பில் தான் நடத்த வேண்டும். இந்த கருத்துக்கேட்பில் சொந்த விருப்பத்தின் பேரில் இலங்கை திரும்ப விரும்புவதாக கூறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டி, தமிழகத்தில் உள்ள அகதிகள் அனைவரும் தாயகம் திரும்ப விரும்புகிறார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும், அதனடிப்படையில் அகதிகளை தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்புவதும் தான் மத்திய, மாநில அரசுகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.

இந்த கணக்கெடுப்பைத் தொடர்ந்து தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளிடம் ஒரு வகையான பதற்றமும், நிச்சயமற்ற நிலையும் நிலவுவதிலிருந்தே இது உறுதியாகிறது. ஒரு நாட்டில் தஞ்சம் தேடி வந்தவர்களுக்கு உணவு, கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை வழங்க வேண்டியது அந்த நாட்டின் கடமை என்று ஐ.நா. விதிகள் கூறுகின்றன. ஆனால், தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகள் நான்காம் தர மக்களாகத் தான் நடத்தப்படுகின்றனர்.

2011-ம் ஆண்டுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையில், இலங்கை தமிழ் அகதிகள் கவுரவமாக வாழ வகை செய்யப்படும் என்பது உள்ளிட்ட 5 வாக்குறுதிகள் அடங்கிய அகதிகள் சிறப்பு மறுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. காவல்துறை ஒப்புதலுடன் கருத்துக் கேட்பு நடத்தி அகதிகளை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் தான் நடைபெறுகின்றன. இத்தகைய கருத்துக்கேட்புகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

இலங்கைத் தமிழ் அகதிகள் அவர்கள் விரும்பும் வரை அனைத்து வசதிகள் மற்றும் உரிமைகளுடன் தமிழகத்தில் வாழ வகை செய்து தர வேண்டும். பணி செய்யும் உரிமை உள்ளிட்ட அகதிகளின் உரிமைகளை வரையறுக்கும் வகையில் சட்டம் இயற்றவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x