Published : 21 Nov 2021 03:07 AM
Last Updated : 21 Nov 2021 03:07 AM

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு; தண்ணீர் சூழ்ந்த குடியிருப்புகளில் முதல்வர் ஆய்வு: முகாம்களில் தங்கியுள்ளோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னை மணலி புதுநகர் பகுதியில் தண்ணீர் சூழ்ந்த குடியிருப்புகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 34 கி.மீ. பரப்பில் அமைந்துள்ள பூண்டி ஏரி, சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும்.

ஆந்திர மாநிலத்தில் கடந்த 18-ம்தேதி பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி, அதிகஅளவில் உபரிநீர் வெளியேற்ற்ப்பட்டு வருகிறது. அவ்வாறு ஆந்திர மாநிலம் அம்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரால், பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி விநாடிக்கு 42 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது.

இதையடுத்து, பூண்டி ஏரியில்இருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இது கொசஸ்தலை ஆற்றில் கலப்பதால், சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்துக்கு உட்பட்ட மணலி புதுநகர் பேஸ்-1, பேஸ்-2 பகுதிகளில், கொசஸ்தலை ஆற்றின் கரையோரப் பகுதிகளான வடிவுடை அம்மன் நகர், ஜெனீபர் நகர், காந்தி நகர், ஆர்.எல்.நகர் மற்றும் மகாலட்சுமி நகர் குடிசைப் பகுதி, சடையன்குப்பம் இருளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை தண்ணீர் சூழத் தொடங்கியது.

ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்து, உடைமைகள் பாழாகின. அப்பகுதியில் உள்ள காவல் நிலையம், அரசுப் பள்ளியிலும் தண்ணீர் சூழ்ந்தது. இதையடுத்து, தண்ணீர் சூழ்ந்த குடியிருப்புகளைச் சேர்ந்த672 பேர் மீட்கப்பட்டு, 3 நிவாரணமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுஉள்ளனர். அவர்களுக்கு 3வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, தேவைப்படுவோருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மணலி புதுநகர் பகுதியில் தண்ணீர் சூழ்ந்த குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். தேங்கிய நீரில், பூட்ஸ் அணியாமல் நடந்து சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதைப் பார்த்து, பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். அவரிடம் முதல்வர் குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரொட்டி, பாய், போர்வை, தலையணை, அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை ஆகியவற்றை முதல்வர் வழங்கினார்.

ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம், வடசென்னை வெள்ள நிவாரணப் பணிகளுக்கான பொறுப்பு அதிகாரி தா.கார்த்திகேயன், வணிகவரித் துறை ஆணையர் எம்.ஏ.சித்திக், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உடனிருந்தனர்.

வீடு கட்டித்தர வேண்டுகோள்

முகாமில் தங்கியுள்ள இருளர் காலனி பகுதி மக்கள் கூறும்போது, "முதல்வர் எங்களை சந்தித்து, `முகாம் வசதியாக உள்ளதா, உணவு சரியான நேரத்தில் கிடைக்கிறதா?' எனக் கேட்டறிந்தார். பின்னர் நிவாரண உதவிகளையும் வழங்கினார். இங்கு எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால் ஒவ்வொரு மழைக்கும் வீடுகளை விட்டுவிட்டு, முகாமில் தங்குவது 50 ஆண்டுகளாக வாடிக்கையாக உள்ளது. எனவே, தண்ணீர் புகாத உயரத்தில் வீடு கட்டித்தர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

வெள்ளம் அதிகம் சூழ்ந்துஉள்ளதால், 50-க்கும் மேற்பட்ட பேரிடர் மீட்புக் குழுவினர் மணலி புதுநகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு விநாடிக்கு 23,500கனஅடியாகக் குறைக்கப்பட்டுஉள்ளது, அப்பகுதி மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x