Last Updated : 19 Nov, 2021 06:23 PM

 

Published : 19 Nov 2021 06:23 PM
Last Updated : 19 Nov 2021 06:23 PM

குமரியில் மீண்டும் சாரல் மழை; தண்டவாளச் சீரமைப்புப் பணியில் தொய்வு: நாகர்கோவில் - திருவனந்தபுரத்துக்கு 7-வது நாளாக ரயில் சேவை ரத்து

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மீண்டும் சாரல் மழை பெய்தது. இதனால் ரயில் தண்டவாளச் சீரமைப்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில் பாதையில் இன்று 7-வது நாளாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி முதல் இரு நாட்கள் விடாமல் பெய்த மழையால் வரலாறு காணாத அளவில் தாழ்வான பகுதிகளிலும், வீடுகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. சாலைகள், ரயில் தண்டவாளங்கள் சேதமாகி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக மழை நின்றிருந்த நிலையில் துண்டிக்கப்பட்ட சாலைகள், குளங்கள் உடைப்பு, மற்றும் ரயில் தண்டவாளங்கள் சீரமைப்புப் பணி வேகமாக நடைபெற்றது.

நாகர்கோவில் நகரப் பகுதியான ஊட்டுவாள் மடம், வடசேரி, ஒழுகினசேரி, ரயில்வே காலனி உட்பட தாழ்வான பகுதிகளிலும், குழித்துறை தாமிரபரணி ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகள், கிள்ளியூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் உட்பட மாவட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள், நெற்பயிர்கள், வாழை, ரப்பர், தென்னை, மற்றும் சேதமடைந்த வீடுகள் குறித்த கணக்கெடுக்கும் பணியில் வருவாய்த் துறையினர், மற்றும் அரசுத் துறையினர் குழுவாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் மாவட்டம் முழுவதும் 12-ம் தேதியில் இருந்து 982 வீடுகள் மழையால் இடிந்து சேதமாகி இருப்பது தெரியவந்துள்ளது. மழை நின்றதைப் பயன்படுத்தி அவசரகால சீரமைப்புப் பணிகள் வேகமாக நடந்து வந்தன. ஞாயிற்றுக்கிழமைக்குள் நாகர்கோவில்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்க தென்னக ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.

இதற்காக பேயன்குழி, நுள்ளிவிளை உட்பட தண்ணீர் தேங்கி தண்டவாளம் மூழ்கிய பகுதி, இரணியல், குழித்துறை, பாறசாலை, நெய்யாற்றங்கரை, பள்ளியாடி பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டதைச் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்தன. கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழித்தடத்தில் ஏற்பட்டிருந்த மண்சரிவு, மற்றும் தண்ணீரால் தண்டவாளம் மூழ்கிய பகுதிகள் சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று மாலையில் இருந்து கன்னியாகுமரியில் இருந்து சென்னை, மற்றும் பிற பகுதிகளுக்குச் செல்லும் ரயில் சேவை தொடங்கியது.

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தண்டவாளத்தைச் சமப்படுத்தும் பணியின்போது ரயில்வே ஊழியர்கள் சோதனையும் நடத்தினர். ஆனால், இன்று காலையில் இருந்து குமரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தது. இதனால் தண்டவாளச் சீரமைப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதுகுறித்து ரயில்வே துறையினர் கூறுகையில், “நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில் தடத்தில் 13 இடங்களில் மண்சரிவு மற்றும் தண்டவாளம் நீரால் மூழ்கிய நிலை இருந்தது. இதில் 9 இடங்களில் சீரமைப்புப் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது. தற்போது குழித்துறை- பள்ளியாடி இடையே ஏற்பட்ட மண்சரிவு அகற்றப்பட்டு வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இரு நாட்களில் முழுமையாகச் சீரமைப்புப் பணிகள் முடிந்து திருவனந்தபுரம் வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும்” என்றனர்.

மழை பாதிப்பிற்குப் பின்னர் இன்று 7-வது நாளாக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதைப்போன்றே குமரி மாவட்டத்தில் பரவலாக நீர்நிலைகளில் ஏற்பட்ட உடைப்பால் துண்டிக்கப்பட்ட சாலைகள் வேகமாகச் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மலை கிராமங்களான கீரிப்பாறை, குற்றியாணி, களியல், மற்றும் பிற பகுதிகளிலும் சாலைகள் சீரமைக்கும் பணிகளும் நேற்று பாதிக்கப்பட்டன.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் தற்போது 43.64 அடியாக உள்ள நிலையில் அணைக்கு உள்வரத்தாக 1030 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1757 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.46 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 1128 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 2074 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x