Published : 13 Mar 2016 10:05 AM
Last Updated : 13 Mar 2016 10:05 AM

மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான பாதுகாப்பு படை வீரரின் உடல் அடக்கம்

கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்த சாரங்கபாணி என்பவரின் இரண்டாவது மகன் ரங்க ராகவன் (39), கடந்த 20 ஆண்டுகளாக சிஆர்பிஎப் படை தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி சுதா மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சென்னையில் பணியாற்றி வந்த ரங்க ராகவன், சில மதங்களுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலத்துக்கு பணி இடமாற்றம் பெற்று சென்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று துணை ராணுவப்படை அதிகாரிகளுடன் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட பகுதியில் வாகனத்தில் சென்றபோது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்தது. அதில், ரங்க ராகவன் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரும் உடனடியாக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஹைதராபாத் கொண்டு வரப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரங்க ராகவன் உயிரிழந்தார்.

ராணுவ சம்பிரதாய நடவடிக்கைகளுக்கு பிறகு, நேற்று அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ராணுவ வாகனத்தில் வடலூர் வந்தது.

ரங்க ராகவன் உடலுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், எஸ்பி விஜயகுமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். எம்பி அருள்மொழிதேவன், எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், சிவசுப்பிரமணியம், செல்வி ராமஜெயம், முருகுமாறன் ஆகியோரும் பொதுமக்களும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பிறகு, அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ரங்க ராகவன் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. மயானத்தில், சென்னை சிஆர்பிஎப் டிஐஜி இளங்கோ தலைமையில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் ரங்க ராகவன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x