Published : 15 Nov 2021 11:12 AM
Last Updated : 15 Nov 2021 11:12 AM

சிறப்பு ரயில்களை சாதாரண ரயில்களாக ஆக்கும் பணி 7 நாட்களில் நிறைவு பெறும்: சு.வெங்கடேசன் எம்.பி. தகவல்

கரோனா பெருந்தொற்று தாக்கம் குறைந்தவரும் நிலையில், சிறப்பு ரயில்களை சாதாரண ரயில்களாக மாற்ற வேண்டும், முதியோர் கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் வெற்றி கிட்டியிருப்பதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா காலத்தில் சிறப்பு ரயில்களாக அறிவிக்கப்பட்டவற்றை சாதாரண ரயில்களாக மாற்ற வேண்டும் என்றும், முதியோர் கட்டணச் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் மீண்டும் வழங்க வேண்டும் எனவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டோம்.

அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நாளுக்கு நாள் கிடைத்து வருகிறது. பொதுப்பெட்டிகள் இணைப்பு உள்ளிட்டு நான் எழுப்பிய பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக முக முக்கியமான வெற்றியை பெற்றுள்ளோம். கோவிட் காலத்தில் ரயில்கள் அனைத்தும் சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டு அதன் கட்டணமும் உயர்த்தப்பட்டிருந்தது. எனவே அதனை மீண்டும் சாதாரண ரயில்களாக மாற்றி , கட்டணத்தினை குறைக்க வேண்டுமென மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தி இருந்தேன். அதில் மிக முக்கியமான வெற்றி கிடைத்துள்ளது.

சிறப்பு ரயில் வண்டிகளை சாதாரண வண்டிகளாக மாற்றுவதற்கு அவற்றின் எண்களை இணையத்தில் பதிவேற்றும் பணி நேற்று இரவு தொடங்கியது. இரவு பதினொன்றரை மணி முதல் காலை ஐந்தரை மணி வரை ஆறு மணி நேரம் இந்த பணி நடைபெறும். நவம்பர் 14 & 15 தேதிகளில் தொடங்கிய இந்தப்பணி ஏழு நாட்கள் படிப்படியாக நடைபெறும். நேற்று இரவு முதல் கட்டமாக 28 வண்டிகள் எண்கள் மாற்ற திட்டமிடப்பட்டது.

இந்த ஏழு நாட்களில் ஆறு மணிநேர காலத்தில் பயணிகள் பயணச்சீட்டுகளை பதிவு செய்ய இயலாது. எண்கள் மாற்றப்பட்டு சாதாரண வண்டிகளாக ஆக்கப்பட்டபின் வழக்கமான கட்டணமும், முதியோர் சலுகை உட்பட மற்ற சலுகைகளும் நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x