Published : 15 Nov 2021 07:12 AM
Last Updated : 15 Nov 2021 07:12 AM

பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்மழை காரணமாக கால்நடைகளை தாக்கும் கோமாரி நோய்

விருத்தாசலம்

தொடர்மழை காரணமாக கால்நடைகள் கோமாரி நோய் தாக்குதலுக்கு ஆளாவதாக மாடு வளர்க்கும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், புவனகிரி, திட்டக்குடி பகுதிகளில் கால்நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிஞ்சிப்பாடியை அடுத்த கல்குணம், புவனகிரி பகுதிகளில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அதுகுறித்து விவசாயிகள் கால்நடைத் துறைக்கு தெரிவித்துள்ளனர்.

பரவலாக மாடுகள் கோமாரி நோயால் மின்னல் வேகத்தில் தாக்கப்பட்டு உயிரிழப்பதால் விவசாயிகள் கவலையடைந் துள்ளனர். தங்களுடைய வாழ்வாதாரமாக விளங்கும் மாடுகளை வளர்த்து, அதன் மூலம் கிடைக்கும் பாலைக் கொண்டு விற்பனை செய்து, வருமானத்தை ஈட்டி வாழ்ந்து வருகிறோம். தற்போது கோமாரி நோயால் தாக்கப்பட்டு எங்களுடைய மாடுகள் உயிரிழப்பதால், நஷ்டத்தை சந்தித்துவருகிறோம். பால் விநியோகம் தடைபடு வதால், குழந்தைகளுக்கு தூய்மையான பசும் பால் கிடைப்பதில் தடை ஏற்பட்டு, உடல் உபாதைக்கு ஆளாகின்றனர்.

கோமாரி நோய் அறிகுறிகளால் பசும்பாலை வாங்குவதற்கும் பெண்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே கால்நடைத்துறை அதிகாரிகள் கோமாரி நோயை தடுக்க அனைத்து கிராமங்களிலும் உடனடியாக கால்நடை சிகிச்சை முகாம்களை ஏற்படுத்த வேண்டும். கால்நடைகளுக்கு தடுப்பூசி மூலம் சிகிச்சை அளித்து கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். குறிப்பாக இறக்கும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குநர் குபேந்திரனிடம் கேட்டபோது, "கோமாரி நோய் அறிகுறிகள் தென்பட்ட பசுக்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ராணிப்பேட்டை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். நோய் குறித்து புகார் எழுந்த கிராமங்களில் நோய் தடுப்பு முகாம்கள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது" எனத் தெரிவித்தார்.

அனைத்து கிராமங்களிலும் உடனடியாக கால்நடை சிகிச்சை முகாம்களை ஏற்படுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x