Published : 14 Nov 2021 01:11 PM
Last Updated : 14 Nov 2021 01:11 PM

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கரூரில் பிரபல மருத்துவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

கரூரில் பிரபல டாக்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குp பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் தனியார் ஆர்த்தோ மருத்துவமனை உள்ளது. இதன் உரிமையாளர் டாக்டர் ரஜினிகாந்த் (55). இங்கு மேலாளராக பணியாற்றுபவர் சரவணன் (55).

இம்மருத்துவமனையில் பணியாற்றி பெண் ஒருவர் 17 வயது மகளுடன் வசித்து வருகிறார். தீபாவளி போனஸ் குறைவாக வழங்கியதால் அதனை வாங்கிக் கொள்ளாத அப்பெண் அதன் பிற்கு வேலைக்குச் செல்லவில்லை.

இந்நிலையில் டாக்டர் ரஜினிகாந்த் அப்பெண்ணின், பிளஸ் 1 படிக்கும் மகளுக்கு நேற்று போன் செய்து ஏன் உன் தாய் வேலைக்கு வரவில்லை எனக்கேட்டுள்ளார். நீங்கள் மற்றவர்களை விட அவருக்கு போனஸ் குறைவாக வழங்கியதால் வேலைக்கு வரவில்லை என அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தீபாவளி போனஸ் மற்றும் புத்தாடைகளை வாங்கிச் செல்ல மருத்துவமனைக்கு வருமாறு சிறுமியை டாக்டர் ரஜினிகாந்த் அழைத்துள்ளார்.

இதையடுத்து மேலாளர் சரவணன் சிறுமியை தொடர்புக்கொண்டு டாக்டர் வெளியில் செல்ல உள்ளதால் உடனே மருத்துவமனைக்கு வர அழைத்துள்ளார்.

இதனை நம்பி நேற்று மாலை மருத்துவமனைக்குச் சென்ற சிறுமிக்கு டாக்டர் ரஜினிகாந்த் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதற்கு மருத்துவனை மேலாளர் சரவணன் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அச்சிறுமி தாயிடம் தெரிவித்ததை அடுத்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் நேற்று புகார் அளித்தார். புகாரின்பேரில் டாக்டர் ரஜினிகாந்த், மேலாளர் சரவணன் ஆகிய இருவர் மீது குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தில் இரு பிரிவுகளின் கீழ் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கரூரின் பிரபல மருத்துவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்திருப்பது அம்மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x