Published : 13 Nov 2021 06:25 PM
Last Updated : 13 Nov 2021 06:25 PM

பாம்பன் தூக்குப் பாலத்தில் மீன்பிடி விசைப்படகு மோதி நடுக்கடலில் மூழ்கியது: படகிலிருந்த 4 மீனவர்கள் மீட்பு

ராமேசுவரம்

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தைக் கடந்தபோது மோதி மூழ்கிய விசைப்படகிலிருந்து 4 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் சனிக்கிழமை பாம்பன் தெற்கு மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மண்டபத்தைச் சேர்ந்த அம்ஜத் கான் என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி விசைப்படகில் 4 மீனவர்களுடன் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று மண்டபம் வடக்கு கடல் நோக்கி மீன்பிடிக்கச் சென்றனர்.

விசைப்படகு ரயில் தூக்குப் பாலத்தைக் கடந்து செல்லும்போது கடல் நீர் உயரம் அதிகரித்திருந்ததால் மீன்பிடி விசைப்படகின் மேற்கூரை தூக்குப் பாலத்தின் மீது மோதி மீன்பிடி விசைப்படகு பலத்த சேதமடைந்தது. இதனால் படகை மீண்டும் கரைக்குக் கொண்டுவர முயன்றபோது படகில் கடல் நீர் புகுந்து நடுக்கடலில் முழ்கியது.

விசைப்படகில் இருந்த யாசர் அராபத், முனியசாமி, கோவிந்தன், சசி ஆகிய நான்கு மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்தனர். கடலில் தத்தளித்த மீனவர்களை அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் மீட்டு பாம்பன் தெற்கு மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். கரைக்கு அழைத்துவரப்பட்ட மீனவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து மண்டபம் மெரைன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் மீன்பிடி விசைப்படகு தூக்குப் பாலத்தில் மோதியதால் பாம்பன் ரயில் தூக்குப் பாலத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என பாம்பன் தூக்குப் பாலம் கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x