Published : 13 Nov 2021 03:07 AM
Last Updated : 13 Nov 2021 03:07 AM

கலைமகள் சபாவை நிர்வகிக்க 3 வாரங்களில் சிறப்பு அதிகாரியை நியமிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

முறைகேடு புகாரில் சிக்கிய கலைமகள் சபா நிர்வாகத்தை நிர்வகிக்க உதவி தலைமைப் பதிவாளர்அந்தஸ்துக்கு குறையாத சிறப்பு அதிகாரியை 3 வாரங்களில் நியமிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலைமகள் சபா எனும் நிதி நிறுவனம் 5 லட்சத்து 33 ஆயிரத்து 356 உறுப்பினர்களிடம் பெற்ற முதலீடு மூலமாக தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி ரியல்எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டது.

இந்நிறுவனத்துக்கு எதிராகமுறைகேடு புகார்கள் வந்ததையடுத்து இந்த நிர்வாகத்தை கவனிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் ஒரு வழக்கறிஞர் மற்றும் சிறப்புஅதிகாரியை நியமித்து நிர்வாகம் மற்றும் சொத்துகளை விற்று உறுப்பினர்களுக்கு உரிய முதலீட்டுத் தொகையை வழங்கவும் கடந்த 1999-ம் ஆண்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுக்கு உரிய தொகை திருப்பி வழங்கப்பட்டது.

இந்நிலையில் கலைமகள் சபா நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்களை விற்று தங்களது உறுப்பினர்களுக்கு உரிய தொகையை வழங்கக் கோரி கலைமகள் சபா உறுப்பினர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 22 ஆண்டுகள் கடந்தும் முதலீட்டாளர்களுக்கு உரிய பணத்தை வழங்கவில்லை எனக்கூறி கலைமகள் சபா நிர்வாகத்தை நிர்வகிக்க உதவி தலைமைப் பதிவாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை சிறப்பு அதிகாரியாக 3 வாரங்களில் நியமிக்க வேண்டும் என தமிழக அரசின் வணிகவரித்துறைச் செயலருக்கு உத்தரவிட்டார்.

மேலும், தற்போது நிர்வாகத்தைகவனிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரியை அந்த பொறுப்பில் இருந்து விடுவித்த நீதிபதி, மொத்த நிர்வாகத்தையும், கணக்கு வழக்குகளையும், ஆவணங்களையும் அடுத்த 3 வாரங்களில் சிறப்பு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.

தற்போது நிர்வாகத்தை கவனித்து வரும் அதிகாரி கலைமகள் சபா நிறுவனத்தின் கணக்குகள், வருமான வரி ஆகியவற்றை தணிக்கை செய்து 6 வாரங்களில் சிறப்பு அதிகாரியிடம் வழங்க வேண்டும் என்றும், சிறப்பு அதிகாரி அதை ஆய்வு செய்து முறைகேடுகளை கண்டறிந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x