

புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்துப் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
"தொடர் மழை காரணமாக புதுவை, காரைக்காலில் ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. 25 வீடுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். மழையால் வேலைவாய்ப்பின்றி கட்டிடத் தொழிலாளர்கள், மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பதிவு செய்துள்ள கட்டிடத் தொழிலாளர் குடும்பத்துக்கு, ரேஷன் கார்டுக்குத் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இதனால் 48 ஆயிரம் குடும்பத்தினர் பயன்பெறுவர்.
மீனவர்களின் குடும்பத்துக்கு ரேஷன் கார்டுக்குத் தலா ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும். இதனால் 44 ஆயிரம் குடும்பத்தினர் பயன்பெறுவர். மாடு இறந்திருந்தால் ரூ.10 ஆயிரம், ஆடு இறந்திருந்தால் ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும். இதர பயிர்களுக்கும், அதிகாரிகளிடம் முழுமையான கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளேன். புதுவை, காரைக்காலில் முழுமையான கணக்கெடுப்பு நடத்தியபின் மத்திய அரசிடம் நிதி கோரப்படும்.
அடுத்த மழைக்குத் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுப்போம். வாய்க்கால் சீரமைத்துத் தூர்வாரும் பணியைச் சரியாகச் செய்யாததால் மறு டெண்டர் வைத்துள்ளோம். சேதமடைந்த நகர, கிராமப்புறச் சாலைகளைச் சீரமைக்க ரூ.186 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மழைக்குப் பின் சாலைகள் அமைக்கப்படும்".
இவ்வாறு முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது பேரவைத் தலைவர் செல்வம், டெல்லி பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ், ஆட்சியர் பூர்வாகார்க் ஆகியோர் உடன் இருந்தனர்.