Published : 12 Nov 2021 03:15 AM
Last Updated : 12 Nov 2021 03:15 AM

பெரியாறு அணையில் தண்ணீர் குறைப்பு; உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானது: கூடலூர் போராட்டத்தில் விவசாயி சங்க ஒருங்கிணைப்பு குழு புகார்

பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தண்ணீர் குறைப்பு நடவடிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானது எனறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர்.பாண்டியன் கூறினார்.

முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் தடுக்கும் கேரளாவைக் கண்டித்தும், அணையை உடைக்க சதி நடைபெறுவதாகக் கூறியும் தமிழக - கேரள எல்லையான குமுளியில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தச் சென்றனர். இவர்களை போலீஸார் கூடலூரில் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத் தலைவர் கேஎம்.அப்பாஸ், தமிழ்நாடு - புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் எம்கேஎம்.முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தேனி மாவட்டத் தலைவர் செல்வக்குமார் உட்பட 5 மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கும் கேரள அரசின் நடவடிக்கைகளை கண்டித்து கோஷமிட்டனர்.

விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர்.பாண்டியன் பேசியதாவது:

அணை குறித்து தவறான தகவல்களை பரப்பும் சமூகவலைதளங்களை முடக்க வேண்டும். அணையில் மேற்கொள்ளப்பட்டு உள்ள தண்ணீர் குறைப்பு நடவடிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானது.

அணையில் இருந்து கேரளப் பக்கம் வெளியேறும் நீர் மலைச்சரிவுகள் வழியே இடுக்கி அணைக்குத்தான் செல்கிறது. ஆனால் இந்த தண்ணீரால் வெள்ளப் பாதிப்பு என்று வதந்தி பரப்பப்படுகிறது. அணை தமிழக கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, பேபி அணை அருகே உள்ள மரங்களை வெட்ட அனுமதி கேட்டதே தவறு.

நீர்தேக்கப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை காப்பாற்றவே கேரள அரசு நீர்மட்டத்தை உயர்த்த தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகிறது. தமிழக படகை தேக்கடியில் இயக்கவும், பொறியாளர்கள் அணைப் பகுதியில் தங்கவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இருமாநில உறவுகளை சீர்குலைக்கும் கேரள நீர்ப்பாசனத் துறை மற்றும் வருவாய்த் துறை அமைச்சர்கள் ரோஸிஅகஸ்டின், ராஜன் ஆகியோரை குடியரசுத் தலைவர் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x