Published : 11 Nov 2021 02:38 PM
Last Updated : 11 Nov 2021 02:38 PM

அதி கனமழையின்போது மக்கள் பின்பற்ற வேண்டிய 10 அம்சங்கள்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம்

சென்னை

அதி கனமழையின்போது மக்கள் பின்பற்றப்படவேண்டியவை என்னென்ன? என்பது குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரைக்கு இடைப்பட்ட பகுதியில் சென்னை அருகே இன்று (11.11.2021) மாலை கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

''இன்று சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும்.

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை (12.11.2021) நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

காற்றின் வேகம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு, மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்'' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இவ்விரு நாட்களிலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள்:

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாகப் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, பொதுமக்கள் கீழ்க்கண்ட அறிவுரைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும்.

''1. பொதுமக்கள் குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள் வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

2. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்பதால் இருசக்கர வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும். மரங்கள் மற்றும் பாழைடைந்த கட்டிடங்களுக்கு அருகில் நிற்பதை தவிர்க்க வேண்டும். மேலும், காற்றின் வேகம் காரணமாக பறந்து விழும் ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் இரும்புத் தகடுகள் காரணமாக காயம் ஏற்படும் என்பதால் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

3. நீர் தேங்கியுள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், ஆறு மற்றும் குளங்களில் குளிக்கச் செல்வதை முழுவதும் தவிர்க்க வேண்டும்.

4. அடையாள அட்டை, சான்றிதழ்கள், உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

5. வீடுகளின் அருகாமையில் அறுந்த மின்கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் அருகில் செல்லக்கூடாது.

6. தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பாதுகாப்பைக் கருதி அருகில் இருக்கும் நிவாரண மையங்களில் தங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

7. டார்ச் லைட்கள், தீப்பெட்டிகள், மெழுகுவர்த்தி, மருந்துகள் மற்றும் உலர்ந்த உணவு வகைகளை இருப்பு வைத்துக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

8. நீர் தேங்கும் பகுதிகளில் கால்நடைகளைக் கட்டி வைக்காமல், கால்நடைகள் தாங்களாகவே எளிதில் வெளியேறும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

9. நீரிலோ அல்லது மின்சாரத்திலோ பொதுமக்கள் காயப்பட நேர்ந்தால் உடனே மாவட்ட கட்டணமில்லா உதவி தொலைபேசி எண்.1077 அல்லது தீயணைப்புத் துறை எண்.101-ஐ தொடர்புகொள்ள வேண்டும்.

10. பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், வாட்ஸ் அப் எண் 94458 69848 மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம்''.

இவ்வாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x