Published : 11 Jun 2014 10:00 AM
Last Updated : 11 Jun 2014 10:00 AM

எல்லா நில ஆவணங்களையும் எளிதில் பார்க்க விரைவில் வசதி: வருவாய்த் துறை அமைச்சர் அறிவிப்பு

அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நில ஆவணங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் மக்கள் எளிதில் அறிந்துகொள்வதற்கான வசதிகள் விரைவில் செய்யப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறினார்.

தமிழக அரசின் வருவாய்த் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடந்தது. அதில் அவர் கூறியதாவது:

ஏறத்தாழ 150 ஆண்டு பாரம்பரியமிக்க நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறையின் வரலாற்றில் முதல்முறையாக நகர்ப்புற நில ஆவணங்கள், வரைபடங்கள், நத்தம் நில ஆவணங்களை கணினிமயமாக்கும் திட்டம் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகர அளவில் அனைத்து நில ஆவணங்களும் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளன. இப்பணி அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவின் பேரில், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நில ஆவணங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் மக்கள் எளிதில் அறிந்துகொள்வதற்கான வசதிகளை விரைவில் அளிக்க உள்ளோம்.

‘அம்மா திட்டம்’, ‘விரைவு பட்டா மாறுதல் திட்டம்’ ஆகியவற்றை திறம்பட நிறைவேற்றும் வகையில், தற்போது காலியாக உள்ள நில அளவை மற்றும் வரைவாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அனைத்து நில உரிமைதாரர்களுக்கும் பாதுகாப்பான நில உரிமையை உறுதி செய்தல், விரைவாக நிலப்பட்டா வழங்குதல், நில மோசடிகளை தடுப்பது ஆகிய பணிகள் மற்றும் நில ஆவணங்களில் வெளிப்படைத்தன்மையோடு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களை செம்மையாக செயல்படுத்த வேண்டும்.

களப்பணியில் உள்ள நில அளவர்கள் தங்களை நாடிவரும் மனுதாரர்களிடம் வெளிப்படையாக நடந்துகொள்ளவேண்டும். கடமை உணர்வுடன் பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். இதில் வருவாய்த் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் இரா.வாசுகி, கூடுதல் இயக்குநர் சு.முத்துகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x