Published : 09 Nov 2021 03:08 AM
Last Updated : 09 Nov 2021 03:08 AM

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான முறைகேடு வழக்கு; 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக பதியப்பட்ட டெண்டர் முறைகேடு வழக்கின் புலன் விசாரணையை முடித்து, 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்குடெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கே டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறி, திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி. பொன்னி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து, முதல்கட்ட விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை முடித்துவைக்க அனுமதி கோரி அரசுத் தரப்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுதலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, "மாநகராட்சிகளில் நடந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருவதால் இந்த வழக்கை முடித்துவைக்கலாம்" என்றார்.

அப்போது, வேலுமணி தரப்பில்ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், "வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அதேசமயம், அந்த வழக்கு எந்த அடிப்படையில் பதிவு செய்யபட்டுள்ளது என்பது குறித்த ஆவணங்களை வழங்க வேண்டும்.

மேலும், இது தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணை அறிக்கையின் நகலையும் வழங்க வேண்டும்" என்றார்.

அதற்கு அரசுத் தரப்பில், "முதல்கட்ட விசாரணை அறிக்கையை வழக்கு ஆவணமாகப் பயன்படுத்த நினைத்தால், அதை கீழமை நீதிமன்றத்தில் முறையாகப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், தற்போதைய நிலையில் அந்த அறிக்கையை வழங்க முடியாது" என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

அறப்போர் இயக்கம் தரப்பில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், ‘‘வேலுமணி மீது வழக்குபதிவு செய்வது மட்டும் கோரிக்கை அல்ல. உடந்தையாக இருந்தவர்கள், பலனடைந்தவர்கள் ஆகியோரை வழக்கில் சேர்க்கும் வகையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும். ஏற்கெனவே கடந்த ஆட்சியில் வழக்கை முடித்து வைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து மனுதாக்கல் செய்துள்ளோம். இரண்டு மத்திய தணிக்கைத் துறை அறிக்கைகள் அவருக்கு எதிராக உள்ளன. எனவே, கடந்த ஆட்சியில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணை அறிக்கையை தரக்கூடாது" என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் புலன் விசாரணையை முடித்து, 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்" என்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு உத்தரவிட்டு, திமுக மற்றும் அறப்போர் இயக்கம்சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x