Published : 08 Nov 2021 12:03 PM
Last Updated : 08 Nov 2021 12:03 PM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்க: காங்கிரஸ் கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு

சென்னை

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடும் மழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்கிற பணியில் காங்கிரஸ் கட்சியினர் உடனடியாக ஈடுபட வேண்டுமென்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோர் 1இல் தொடங்கி டிசம்பர் 31 வரை பெய்யும் என்பதை எதிர்நோக்கி தமிழக அரசு திட்டமிட்டுச் செயலாற்றியதால் வெள்ள நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டு, பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழக முதல்வ மு.க.ஸ்டாலின் உடனடியாக வெள்ளப் பகுதிகளுக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உரிய ஆணைகளைப் பிறப்பித்து, நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டதற்காக அவரைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். இதன் மூலம் அரசு எந்திரம் வேகமாகச் செயல்பட்டு வருகிறது.

கடந்த 2015இல் பெய்த கடும் மழையின் காரணமாக அன்றைய அதிமுக ஆட்சியில் முறையான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நவம்பர் 17ஆம் தேதி 18,000 கன அடி நீரும், டிசம்பர் 2 ஆம் தேதி 29,000 கன அடி நீரும் திடீரென முன்னறிவிப்பு இல்லாமல் இரவு நேரங்களில் திறந்து விடப்பட்ட காரணத்தால் ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த அப்பாவி மக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதற்கும், உடமைகள் இழப்பு ஏற்படுவதற்குமான அவலநிலை ஏற்பட்டது. அத்தகைய நிலை ஏற்படாமல் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி போன்ற நீர்த் தேக்கங்களில் இருந்து உரிய நீர் மேலாண்மை திட்டத்தின் அடிப்படையில் தண்ணீர் படிப்படியாகத் திறந்து விடப்பட்டதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை சென்னை மாநகர மக்களை வெள்ள பாதிப்பிலிருந்து முற்றிலுமாக பாதுகாத்திருக்கிறது.

தமிழகத்தில் ஒரே நாளில் 23 செ.மீ. மழை பெய்ததால் பல பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வடகிழக்குப் பருவமழையின் காரணமாக அக்டோபர் 1 முதல் 7 ஆம் தேதி வரை இயல்பு நிலையை விட 43 சதவிகிதம் கூடுதல் மழை பெய்திருக்கிறது. 36 மாவட்டங்களில் அதிக மழை பெய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை வானிலை ஆய்வாளர் கூற்றின்படி நவம்பர், டிசம்பர் மாதங்களில் 25 நாட்கள் கன, மிக கனமழை இருக்கும் என்று அந்த அறிவிப்பு கூறுகிறது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அல்லது வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைக்குரிய செயல் திட்டத்தைப் போர்க்கால அடிப்படையில் உருவாக்குகிற பணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஈடுபட்டிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடும் மழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்கிற பணியில் காங்கிரஸ் கட்சியினர் உடனடியாக ஈடுபட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட வெள்ளப் பகுதிகளுக்கு சென்று அரசு அதிகாரிகளோடு இணைந்து, நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக போய்ச் சேருவதை உறுதி செய்கிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் துணைபுரிய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x