Published : 06 Nov 2021 03:05 AM
Last Updated : 06 Nov 2021 03:05 AM

பல்வேறு மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புகூட்டு வரியை குறைக்க வேண்டும்: அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததை தொடர்ந்து, மதிப்பு கூட்டு வரியை பல மாநிலங்களும் குறைத்துள்ளன. அதுபோல, தமிழக அரசும் குறைக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கைகளில் கூறியுள்ளதாவது:

ஓ.பன்னீர்செல்வம்: டீசல் விலைலிட்டருக்கு ரூ.100-ஐ தாண்டி உயர்ந்துகொண்டே போவதை சுட்டிக்காட்டி, அதன் விலையை மாநில அரசின் சார்பில் ஓரளவு குறைக்கவும், எண்ணெய் நிறுவனங்களுக்கு வரும் லாபத்தில் ஒரு பகுதியை விட்டுத் தருவது மற்றும் மத்திய அரசின் கலால் வரியை ஓரளவு குறைப்பது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுமுதல்வருக்கு கடந்த அக்.19-ம்தேதி அறிக்கை வாயிலாக வேண்டு கோள் விடுத்தேன்.

நவ.3-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.106.76, டீசல் ரூ.102.69-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், பொருளாதாரத்தை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், தீபாவளி பண்டிகை முதல் அதாவது நவ.4-ம் தேதி முதல் பெட்ரோல் மீதான கலால்வரியை லிட்டருக்கு ரூ.5 குறைத்தும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்தும் மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்மூலம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40, டீசல் ரூ.91.43-க்குவிற்கப்படுகிறது. இது வரவேற்கத் தக்கது.

தமிழக அரசு மவுனம்

இதைத் தொடர்ந்து, அசாம், கோவா, குஜராத், ஹரியாணா, கர்நாடகா, திரிபுரா, மணிப்பூர், சிக்கிம், புதுச்சேரி மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை (‘வாட்’) ரூ.7 குறைத்துள்ளன. இதன்மூலம் இந்த மாநிலங்களில் டீசல் விலை ரூ.17,பெட்ரோல் விலை ரூ.12 குறைந்துள்ளது. இதுதவிர, உத்தராகண்டில் பெட்ரோல் ரூ.2, டீசல் ரூ.7, பிஹாரில் பெட்ரோல் ரூ.3.20, டீசல் ரூ.3.90, அருணாச்சல பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் ரூ.5.20, ஒடிசாவில் பெட்ரோல், டீசல் ரூ.3,மத்திய பிரதேசத்தில் 4 சதவீதம் என மதிப்புக் கூட்டு வரி குறைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி குறைப்பு குறித்து தமிழக அரசு மவுனம் சாதிப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 விலை குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் மீதானவரியை ரூ.3 மட்டுமே குறைத்தது.டீசல் மீதான வரியை குறைக்கவில்லை. தற்போது மத்திய அரசுகுறைத்துள்ள நிலையில், அதைப்பின்பற்றி தமிழக அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியை ரூ.7 குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பொருட்கள் விலை குறையும்

அப்போதுதான் தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், வாகன வாடகைஆகியவை மற்ற மாநிலங்களுக்கு சமமாக குறையும். மேலும், புதுச்சேரியை ஒட்டியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு சென்று எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் சூழல் உருவாகி, அதன்மூலம் தமிழகத்துக்கு வருவாய் குறையும் நிலையும் ஏற்படும்.

எனவே, நாட்டின் நலன், மக்களின் நலனை கருத்தில் கொண்டு, முதல்வர் இதில் உடனே தலையிட்டு, பெரும்பாலான மாநிலங்களில் குறைக்கப்பட்டதுபோல, மதிப்பு கூட்டு வரியை குறைந்தபட்சம் பெட்ரோலுக்கு ரூ.2, டீசலுக்கு ரூ.4 குறைக்க வேண்டும்.

கே.பழனிசாமி: பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்ததும், பல மாநிலங்களும் மதிப்புக் கூட்டு வரியை குறைத் துள்ளன. ஆனால், திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி குறைக்காமல், மாநிலமதிப்புகூட்டு வரியை சிறிதளவுகுறைத்துள்ளது. எனவே, தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x