Published : 01 Nov 2021 04:49 PM
Last Updated : 01 Nov 2021 04:49 PM

சர்ச்சைகள், குழப்பங்களுக்கு இடமளிக்காதீர்; நவ.1-ம் தேதியே தமிழ்நாடு நாள்: வானதி சீனிவாசன்

சர்ச்சைகள், குழப்பங்களுக்கு இடமளிக்காமல் நவம்பர் 1-ம் தேதியையே தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதி சென்னை மாகாணமாக அறிவிக்கப்பட்டது. இந்நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் இனி ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி, 'தமிழ்நாடு நாள்' என்று சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று கடந்த 2019 ஜூலை 20-ம் தேதி சட்டப்பேரவையில் அன்றைய முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பை வரவேற்ற அன்றைய திமுக தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு நாளுக்கு கடந்த இரு ஆண்டுகளாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்த அக்டோபர் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலதரப்பினரின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு மாநிலம் என்ற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 1967 ஜூலை 18-ம் தேதியை நினைவுகூரும் வகையில், இனி ஆண்டுதோறும் ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்" என்று கூறியுள்ளார்.

1956 நவம்பர் 1-ம் தேதி தமிழ் மொழி பேசும் மக்களைக் கொண்ட மாநிலம் உருவாக்கப்பட்ட நாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும். 1967 நவம்பர் 18-ம் தேதி சென்னை மாகாணத்திற்குத் 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 1969 ஜூலை 18-ம் தேதிதான் 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றப்பட்டது.

ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளை அல்ல. இதனைப் பல்வேறு தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, தேவையற்ற சர்ச்சைகள், குழப்பங்களுக்கு இடமளிக்காமல் நவம்பர் 1-ம் தேதியையே தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும்''.

இவ்வாறு வானதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x