Published : 01 Nov 2021 03:06 AM
Last Updated : 01 Nov 2021 03:06 AM

ஜூலை 18-க்கு மாற்றியது கண்டனத்துக்குரியது, பொருத்தமற்றது; நவ.1-ம் தேதியே ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்பட வேண்டும்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

‘தமிழ்நாடு நாள்’ நவ.1-ம் தேதிதான் கொண்டாடப்பட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். அந்த நாளை ஜூலை 18-ம் தேதிக்கு மாற்றியதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்றுவெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மெட்ராஸ் மாகாணத்துடன் இருந்த ஆந்திரா, கர்நாடகா, கேரளாவின் சில பகுதிகளும் பிரிக்கப்பட்டன. அப்போது பிரிக்கப்பட்ட மெட்ராஸ்தான் தற்போதைய தமிழ்நாடு. அதன்படி, நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாளாக அதிமுக அரசு அறிவித்தது.

இந்நிலையில், மெட்ராஸ் மாகாணம் என்பதை மாற்றி தமிழ்நாடு என பெயர் சூட்டிய ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

இது பொருத்தமற்ற, மரபு மீறிய செயல்.உள்நோக்கத்துடன் கூடிய அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்ட செயலாகும். இதற்குகடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்காக 1967 ஜூலை 18-ம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தாலும், 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதிதான் அப்பெயர் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது. முதல்வர் வாதத்தின்படி, ஜனவரி14-ம் தேதிதான் தமிழ்நாடு நாள் கொண்டாட வேண்டும்.

ஒரு குழந்தை பிறக்கும்போது வைத்தபெயர் 10 ஆண்டுகள் கழித்து மாற்றப்பட்டாலும், அந்த குழந்தையின் பிறந்தநாளை மாற்ற முடியாது. அதேபோலதான், மெட்ராஸ்மாகாணம் என்ற குழந்தைக்கு பெயர் மாற்றப்பட்டாலும், அது பிறந்த நவம்பர் 1-ம் தேதியை பிறந்தநாளாக கொண்டாடுவதே பொருத்தமாக இருக்கும்.

சென்னை மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலங்கள் எல்லாம் நவம்பர் 1-ம் தேதியையே, மாநிலங்கள் உருவான நாளாககொண்டாடுகின்றன. இதை கருத்தில் கொண்டு, ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு நாள் என்ற அறிவிப்பை திரும்ப பெறவேண்டும். நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாள் என்று தொடர்ந்து இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முதல்வர் எடுக்க வேண்டும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: நவம்பர் 1-ம் தேதிக்கு பதில் ஜூலை 18-ம் தேதிதான் தமிழ்நாடு நாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது மிகவும் வியப்பாக உள்ளது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ம் தேதியை அந்தந்த மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. அதே நாள்தான் சென்னை மாகாணம் இன்றைய தமிழகமாக உருவெடுத்தது.

தியாகி சங்கரலிங்கனார் உண்ணா நோன்பு இருந்து நம் மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என அறப்போராட்டம் நடத்தி உயிர் துறந்தார். அதன் பின்னர்தான் தமிழகத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

குழந்தை பிறந்தநாள்தான் குடும்பத்தினரால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும். குழந்தைக்கு பெயர் சூட்டிய நாளை எவரும் கொண்டாடுவது இல்லை.

வரலாற்றை திசை திருப்புவதா?

கடந்த அதிமுக அரசு நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்த ஒரே காரணத்துக்காக அதை மாற்ற நினைப்பது திமுக அரசுக்கு அழகல்ல. வரலாற்றை திசை திருப்புவதே திமுக அரசின் நோக்கமாக இருந்து வருகிறது.

மக்களுக்கு எதிரான முரண்பாட்டு கருத்துகளே தனது கொள்கை என்பதை திமுக மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது. நவம்பர் 1-ம் தேதிதான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x