Last Updated : 01 Nov, 2021 03:07 AM

 

Published : 01 Nov 2021 03:07 AM
Last Updated : 01 Nov 2021 03:07 AM

தீபாவளி நெரிசலில் குற்றவாளிகளை அடையாளம் காண காவல் நிலையம்தோறும் வாட்ஸ்அப் குழுக்கள்

தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க, நகரின் முக்கிய பகுதிகளில் பொது மக்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகள் ஈடுபட்டு விடக் கூடாது என்பதற்காக சென்னை காவல் துறை, கண்காணிப்பு பணியை தீவிரப்படத்தியுள்ளது.

நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் குற்றவாளிகளின் முகத்தை அடையாளம் காணும் கேமரா செயலி (Face Recognition Camera) பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த செயலியில் குற்றப் பின்னணி கொண்ட அனைத்து குற்றவாளிகளின் புகைப்படங்கள் மற்றும் அவரது குற்றப் பின்னணி தொடர்பான அத்தனை விபரங்களும் இடம்பெற்றிருக்கும். இந்த செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்ட 1,200 காவல் உதவி ஆய்வாளர்கள் சென்னை முழுவதும் ஆங்காங்கே பணியமர்த்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தங்களது செல்போனில் சந்தேக நபர்களை `க்கியூஆர் கோடு' மூலம் ஸ்கேன் செய்தால் சம்பந்தப்பட்டவர் மீது குற்ற வழக்குகள் இருந்தால் அது தொடர்பான அனைத்து தகவல்களும் போலீஸாருக்கு தெரிந்து விடும். இதேபோல் சென்னையில் உள்ள 137 காவல் நிலைய போலீஸாரும், தனித்தனியாக வாட்ஸ்அப் குழு தொடங்கி முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் பரிமாற்றம் செய்து வருகின்றனர்.

இதேபோல் போலீஸ் உயர் அதிகாரிகளும் வாட்ஸ்அப் குழுக்களை ஏற்படுத்தி பாதுகாப்புக்கு தேவையான தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x