Published : 01 Nov 2021 03:07 AM
Last Updated : 01 Nov 2021 03:07 AM

பெண்கள் அனைவரும் கட்டாயமாக மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: கனிமொழி எம்.பி. அறிவுறுத்தல்

உலக மார்பக புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பங்கேற்று பரிசோதனை முகாமில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

சென்னை

உலக மார்பகப் புற்றுநோய் மாதத்தை (பிங்க் அக்டோபர்) முன்னிட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய மாபெரும் மார்பக பரிசோதனை முகாம் நேற்று நிறைவடைந்தது.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக மகளிர் அணிச் செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி. பரிசோதனை முகாமில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மருத்துவமனை டீன் ஆர்.சாந்திமலர், கதிரியக்கத் துறை தலைவர் தேவி மீனாள், மருத்துவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்தில் மிகப்பெரிய அளவில் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமின் மூலம் 597 பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 18 பேருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பெண்கள் அதிகளவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து, மார்பகப் புற்றுநோயை கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற்றுக்கொண்டால், முழுவதுமாக குணமடைந்துவிட முடியும். மார்பகப் புற்றுநோயை கண்டறியும், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ‘மேமோகிராம்’ கருவி இந்த மருத்துவமனையில்தான் உள்ளது.

தமிழகத்தில் உள்ள பெண்கள் இந்த மருத்துவமனையில் மார்பக பரிசோதனையை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாகவும், மற்றவர்களுக்கு ரூ.1,000 கட்டணத்திலும் பரிசோதனை செய்யப்படுகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x