Published : 30 Oct 2021 03:13 AM
Last Updated : 30 Oct 2021 03:13 AM

கோயில் அறங்காவலர் பதவிகளுக்கு தகுதியானவரை விண்ணப்பிக்க செய்வோம்: பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை வேண்டுகோள்

சென்னை

திருக்கோயில் அறங்காவலர் பதவிகளுக்கு, தகுதியான நபர்களை விண்ணப்பிக்க வைக்கவேண்டும் என்று பாஜக மாவட்டத் தலைவர்களுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக தொண்டர்களுக்கு அவர் நேற்றுஎழுதிய கடிதம்:

இறைவனுக்கு செலுத்திய உண்டியல் காணிக்கை பணத்தில் அறநிலையத் துறை அலுவலர்களுக்கு சொகுசு கார்களை வாங்கி குவிக்கிறார்கள். அறநிலையத் துறையின் இதுபோன்ற பல்வேறு அவலங்கள் காரணமாக திருக்கோயில்கள் பல திறமையாக செயல்பட முடியாமல் உள்ளன. இதற்காக பாஜக சார்பில் போராடிவருகிறோம். இப்போது அறநிலையத் துறையில் சென்னைஉயர் நீதிமன்றம் தலையிட்டுஅறங்காவலர்களை நியமிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

நீதிமன்றத்தில் மாநில அரசு கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தின்படி, ரூ.10 லட்சத்துக்கும் குறைவான வருமானம்உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் அறங்காவலர்கள் நியமிக்க விண்ணப்பங்களை வரவேற்கிறது. நாம்எல்லோரும் திருக்கோயில்களில் நடைபெறும் அவலங்களை குறை சொல்வதோடு மட்டுமல்லாது, அவற்றையெல்லாம் சரிசெய்யும் அதிகாரத்தையும் பெறக்கூடிய மிகச் சாதகமான சூழ்நிலை தற்போது நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, பாஜக மாவட்டத் தலைவர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள ரூ.10 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளதிருக்கோயில்களைக் கண்டறிந்து பட்டியலிடுங்கள். அந்தகோயில்களுக்கு அறங்காவலராக பணியாற்ற தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்யுங்கள். அவரை முறைப்படி அரசுக்கு நவம்பர் 9-க்குள் விண்ணப்பிக்க வையுங்கள்.

தமிழகத் திருக்கோயில்களைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பும், கடமையும் நம்அனைவருக்கும் இருக்கிறது.தகுதியான அறங்காவலர் நியமனத்தை கண்காணிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியல் தலையீடுகள் வந்தால் அதை நீதியும், சட்டமும் தடுக்கும். நாம் அனைவரும் நம்திருக்கோயில்களைப் பாதுகாக்க முன்வருவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x