Last Updated : 29 Oct, 2021 03:09 AM

 

Published : 29 Oct 2021 03:09 AM
Last Updated : 29 Oct 2021 03:09 AM

தீபாவளி தீ விபத்துகளைத் தடுக்க தீயணைப்புத் துறையில் முன்னேற்பாடுகள் தீவிரம்: தயார் நிலையில் 352 நிலையங்கள், 7,800 வீரர்கள்

கோப்புப் படம்

சென்னை

தீபாவளி தீ விபத்துகளைத் தடுக்க, 352 தீயணைப்பு நிலையங்கள், 7 ஆயிரத்து 800 வீரர்களுடன் தீயணைப்புத் துறை தயாராகி விட்டது.

தீபாவளியையும் தீ விபத்துகளையும் பிரிக்க முடியாது. நாம் கவனமாக செயல்பட்டால் 95 சதவீததீ விபத்துகளை நிச்சயம் தவிர்த்துவிடலாம். கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய தினங்களில் மழை பெய்ததால் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தது.

தமிழகம் முழுவதும் தீபாவளி தினத்தன்று 2014-ல் 82 தீ விபத்துகளும், 2015-ல் 88, 2016-ல் 836,2017-ல் 166, 2018-ல் 232, 2019-ல் 128,2020-ல் 106 விபத்துகள் நடந்துள்ளன. மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள சென்னையில் விழிப்புணர்வில்லாமல் பட்டாசுகளை வெடிப்பதே அதிக விபத்துகளுக்குக் காரணம்.

இந்நிலையில், தீபாவளி தீவிபத்துகளைத் தடுக்க தீயணைப்புத் துறை இப்போதே தயாராகி விட்டது. இதுகுறித்து தமிழ்நாடு தீயணைப்புத் துறை இணை இயக்குநர் பிரியா கூறியதாவது:

தீ விபத்து குறித்து அழைப்பு வந்த 20 விநாடிகளுக்குள் வீரர்கள் அனைவரும் வண்டியில் அமர்ந்து தயாராகிவிட வேண்டும். 2 நிமிடத்தில் நிலையத்தில் இருந்து வண்டிபுறப்பட வேண்டும். ஒரு நிமிடத்துக்கு ஒரு கிலோ மீட்டர் என்ற வேகத்தில் செல்ல வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் நெருக்கடி மிகுந்த இடங்களில் இது சாத்தியமில்லை. இருந்தாலும் முடிந்தவரை விரைவாக சென்று விடுவோம். தமிழகம் முழுவதும் 352 நிலையங்களில் 7 ஆயிரத்து 800 வீரர்கள் தீயணைக்கும் பணிக்குதயார் நிலையில் இருப்பார்கள்.

சென்னையில் 42 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு விபத்து ஏற்படும் பகுதிகள் என 19 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் ஒரு தீயணைப்பு வண்டி எப்போதும் நிறுத்தப்பட்டிருக்கும். நீர் நிரப்பப்பட்ட 50 டேங்கர் லாரிகள் தயார் நிலையில் உள்ளன.

சென்னையில் 700 தீயணைப்பு வீரர்களும், 82 தீயணைப்பு வாகனங்களும் உள்ளன. சென்னையில் தீவிபத்துகள் அதிகமாக நடப்பதால் வெளி மாவட்டங்களில் இருந்துசென்னைக்கு 15 தீயணைப்பு வண்டிகளும், 300 வீரர்களும் கூடுதலாக வரவழைக்கப்பட உள்ளன.

சென்னையில் மட்டும் 1,500 வீரர்கள் தீயணைப்பு பணியில் இருப்பார்கள். தீபாவளியன்று தீயணைப்பு வீரர்களுக்கு விடுமுறை கிடையாது. விடுமுறையில் இருப்பவர்களும் பணிக்குத் திரும்பி வரவேண்டும்.

ராக்கெட் பட்டாசுகளால்தான் அதிகமான தீ விபத்துகள் நடக்கின்றன. இந்த வகை பட்டாசுகளை திறந்தவெளி மைதானங்களில் மட்டுமே வெடிக்க வைக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் ‘101’ மற்றும் ‘102’ எண்களுக்கு உடனே தகவல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x