Published : 28 Oct 2021 04:52 PM
Last Updated : 28 Oct 2021 04:52 PM

கூட்டுறவு வங்கிகளில் ரூ.15 கோடி நகைக் கடன் மோசடி: அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல்லில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கிய அமைச்சர் ஐ.பெரியசாமி.

திண்டுக்கல் 

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் 30 சதவீதம் மட்டுமே நகை மோசடி தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுவரை 15 கோடி நகைக் கடன் மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், இன்று (அக். 28) சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்.பி. ப.வேலுச்சாமி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கொடி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்று கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருட்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற நகை மோசடி தொடர்பாக நடத்திய ஆய்வில் பல்வேறு இடங்களில் போலி நகைகளை வைத்தும், நகைகளை வைக்காமலும் இதுவரை ஏறத்தாழ ரூ.15 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதுவரை 30 சதவீதக் கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு குழுக்கள் அமைத்து அனைத்துக் கூட்டுறவு சங்கங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆய்வுக்கு அதே மாவட்ட அதிகாரிகளை அனுப்பாமல், வெளி மாவட்டங்களில் இருந்து அதிகாரிகளை வரவழைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூட்டுறவுக் கடன் சங்கம் மற்றும் கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் உள்ள கணினிகளை ஒன்றாக இணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் ஆறு மாதத்துக்குள் நிறைவடையும். பணிகள் நிறைவடைந்த பின்னர் இதுபோன்ற தவறுகள் இனி நடைபெற வாய்ப்பில்லை. நகை மோசடி வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தலைவர்கள் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

கூட்டுறவுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தீபாவளி முடிந்ததும் வெளியிடப்படும். எந்தத் தவறும் நடைபெறாமல் வெளிப்படைத் தன்மையுடன் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்".

இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x