Published : 26 Oct 2021 03:06 AM
Last Updated : 26 Oct 2021 03:06 AM

பக்தர்களுக்கு தேவையான உணவு, தங்கும் வசதிக்கு ஏற்பாடு; சபரிமலையில் முதியவர், குழந்தைகளுக்கும் அனுமதி: சென்னையில் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் தகவல்

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, தங்கும் வசதிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் என்.வாசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

சபரிமலைக்கு தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துதான் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். கரோனா காரணமாகசபரிமலைக்கு பக்தர்கள் வரபல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, பல கட்டுப்பாடுகளை தளர்த்த உள்ளோம்.

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கடந்த மாதம் நாளொன்றுக்கு 25 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்தோம். ஆனால், வெள்ளம் காரணமாக பக்தர்களை அனுமதிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

எனவே, வரும் நவ.16-ம் தேதிமுதல் கார்த்திகை மாதத்தில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். பக்தர்கள் 2 தவணை கரோனா தடுப்பூசியை அவசியம் போட்டிருக்க வேண்டும்.

கரோனா காரணமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதை விலக்கி நவ.16-ம்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம்.

கார்த்திகை மாதத்தில் இருந்து சன்னிதானத்தில் அபிஷேகம் செய்வதற்கான நெய்யை பக்தர்கள் நேரடியாக வழங்கலாம். பக்தர்கள் தங்குவதற்கான வசதி, உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துள்ளோம்.

முன்பு இருந்ததுபோல பம்பா வரை போக்குவரத்துக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x