Published : 09 Mar 2016 07:38 PM
Last Updated : 09 Mar 2016 07:38 PM

விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டத்தை கைவிடுக: முத்தரசன்

பிரதமர் மோடி தலையிட்டு விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டத்தை கைவிடச் செய்யவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்கும் கெயில் நிறுவனத்தின் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால் மேற்கு மாவட்டங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோகும் பேரபாயம் உருவாகியுள்ளது.

கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டத்தை அறிந்து கொண்ட தருணத்திலிருந்து விவசாயிகள் வாழ்வுரிமைக்காக போராடி வருகிறார்கள்.போராட்டம் உச்சகட்டத்தை எட்டிய போதுதான் தமிழக அரசு கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தியது.இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று கெயில் திட்டத்தை விவசாய நிலங்களின் வழியாக செயல்படுத்தாமல் மாற்றுவழியில் கொண்டு செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவையும்,அரசும் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்க தடைவிதித்தது. ஆனால் இதனை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நிலை நாட்ட தவறிவிட்டது.

ஒருவகையில் தமிழக அரசு விவசாயிகளை போக்குகாட்டி ஏமாற்றிவிட்டது.இந்த நிலையில் கெயில் நிறுவனத்தின் நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டத்தை கைவிடச் செய்யவேண்டும்.

1962 ஆம் ஆண்டு பெட்ரோலிய,கனிமவள குழாய் பதிப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x