Published : 24 Oct 2021 03:07 AM
Last Updated : 24 Oct 2021 03:07 AM

பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு சென்னை ஜெம் மருத்துவமனையில் பயிற்சி வகுப்பு: ஐஏஜிஇஎஸ் சங்கத்துடன் இணைந்து நடத்துகிறது

நாட்டின் முன்னணி குடல்நோய்நுண்துளை சிறப்பு மருத்துவமனையான சென்னை ஜெம் மருத்துவமனை, இந்திய குடல்நோய் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கத்துடன் (ஐஏஜிஇஎஸ்) இணைந்து, பெருங்குடல் மற்றும் மலக்குடல் அறுவை சிகிச்சை குறித்த 3 நாள் வகுப்பை நடத்தி வருகிறது.

சென்னை ஜெம் மருத்துவமனையில் நடந்த தொடக்க விழாவில், தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு, பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். கவுரவ விருந்தினராக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர் பி.கிருஷ்ணா ராவ் பங்கேற்றார்.

தொடக்க விழாவில், ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர் சி.பழனிவேலு பேசியதாவது:

பெருங்குடல் புற்றுநோய்க்கு, ஜெம் மருத்துவமனைதான் முதல்முறையாக லேப்ராஸ்கோபிக் நுண்துளை அறுவை சிகிச்சையை அறிமுகம் செய்தது. கடந்த 30 ஆண்டுகளில் பெருங்குடல் புற்றுநோய்க்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லேப்ராஸ்கோபிக் நுண்துளை அறுவை சிகிச்சை செய்துள்ளோம்.

குடல் நோய் அறுவை சிகிச்சை தொடர்பான ‘பால்ஸ் கொலரெக்டல் 2021’ அறுவை சிகிச்சை பயிற்சி வகுப்பை, இந்திய குடல்நோய் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கத்துடன் (ஐஏஜிஇஎஸ்) இணைந்து அக்டோபர் 22 முதல்24 வரை நடத்துகிறோம். பெருங்குடல் நோய் அறுவை சிகிச்சையில் அனுபவம்மிக்க மருத்துவர்கள், இந்த சான்றளிப்பு வகுப்பில் பங்கேற்றுள்ளனர். நிபுணத்துவம், அனுபவம் பெற்ற அறுவை சிகிச்சை மருத்துவர்கள் விவாதங்கள், குழு விவாதங்கள், சிறப்பு சொற்பொழிவுகள், ஒளிப்பட விளக்கங்கள் போன்றவற்றை நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை ஜெம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி எஸ்.அசோகன் பேசும்போது, ‘‘இந்த கல்வி சந்திப்பில் 200-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்’’ என்றார். மருத்துவமனை இயக்குநர் பி.செந்தில்நாதன் பேசும்போது, ‘‘எவ்வித சிக்கலான குடல்நோய் அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள், 4K/3Dநுண்துளை அறுவை சிகிச்சை அமைப்புகள், டாவின்சி ரோபோட்டிக் அமைப்புகள் போன்றவை பேருதவியாக உள்ளன. நோயாளிகளுக்கு உயர் தரமான மருத்துவ சிகிச்சைகளை தருவதில் நாங்கள் முன்னணியில் உள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x