Published : 23 Oct 2021 12:54 PM
Last Updated : 23 Oct 2021 12:54 PM

பாமக நிர்வாகி தேவமணி படுகொலை; கூலிப்படையை ஏவிக் கொலை செய்யும் கலாச்சாரம் ஒடுக்கப்பட வேண்டும்: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

பாமக நிர்வாகி தேவமணி படுகொலைக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 23) வெளியிட்ட அறிக்கை:

"புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்ட பாமக செயலாளரும், அப்பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவருமான தேவமணி திருநள்ளாற்றில் நேற்றிரவு கூலிப்படையினரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொடியவர்களால் படுகொலை செய்யப்பட்ட தேவமணி உணர்வு மிக்க பாட்டாளி ஆவார். பாமக தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அப்பகுதியில் கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வந்தவர். அந்தப் பகுதி மக்களின் சுக துக்கங்களில் பங்கேற்றவர். திருநள்ளாறு பகுதியில் பொதுநலனுக்காகப் பாடுபட்டவர்.

புதுவையில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை அம்மாநில அரசு கடந்த ஆண்டு சட்டவிரோதமாக உயர்த்தியபோது, அதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் களையும் நோக்குடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்து வரி உயர்வை ரத்து செய்தவர்; அதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்.

புதுவை மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் சட்டவிரோதமாக இயங்கி வந்த நிலையில், சட்டப் போராட்டம் நடத்தி அவற்றை மூடுவதற்கு வகை செய்தவர்.

என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் பற்றும் கொண்டவர். கட்சி வளர்ச்சி மற்றும் பொதுநலன் சார்ந்து நான் இட்ட பணிகள் அனைத்தையும் உடனடியாகச் செய்து முடிப்பது அவரது வழக்கம். திருநள்ளாறு மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அவர், அரசியலிலும், பொது வாழ்விலும் உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவர். மிக இளம் வயதில் அவர் நம்மை விட்டுப் பிரிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியவில்லை; மிகுந்த துயரமளிக்கிறது.

காரைக்கால் தேவமணியைப் படுகொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் மீது கூலிப்படையை ஏவிக் கொலை செய்யும் கலாச்சாரம் ஒடுக்கப்பட வேண்டும். தேவமணியின் படுகொலைக்குக் காரணமானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி அவரது குடும்பத்துக்கு நீதி பெற்றுத்தர புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x