Published : 23 Oct 2021 03:06 AM
Last Updated : 23 Oct 2021 03:06 AM

நகைக் கடன் தள்ளுபடியால் 11 லட்சம் பேர் பயன்: ஒரு வாரத்தில் அரசாணை என அமைச்சர் பெரியசாமி தகவல்

தமிழகத்தில் 5 பவுனுக்கு உட்பட்ட கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி மூலம் 11 லட்சம் பேர் பயனடைவார்கள். இதற்கான அரசாணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

கூட்டுறவுத் துறை செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்த ஆண்டுக்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ.11,500 கோடி பயிர்க்கடனை தொய்வின்றி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

லாபத்தில் இயங்கும் 500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு, இதுவரை 192 சங்கங்களில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற திட்டங்களுக்கும் ஒப்புதல்வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விற்கப்படும் ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைத்து இயற்கை உரங்கள் விற்பனை அதிகரிக்கப்படும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் உயிர் உரங்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றின் பயன்பாடு அதிகரிக்கப்படும்.

கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்கள், மக்களால் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றஅறிவிப்பின்படி, 37 சதவீத ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசாணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும், இதன்மூலம் 11 லட்சம் பேர் பயனடைவார்கள்.

15 கூட்டுறவு சங்கங்களில் ரூ.12கோடிக்கு முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து ஆய்வு நடக்கிறது. தமிழகத்தில் இதுவரை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பாசன பகுதி அல்லாத மாவட்டங்களில் 31 மையங்கள் திறக்கப்பட்டு 8,437 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு அனைத்து நியாயவிலைகடைகளும் முறையாக திறக்கப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தங்குதடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை கள அலுவலர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டுறவுத் துறை செயலர் முகமது நசிமுதீன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x