Last Updated : 22 Oct, 2021 06:38 PM

 

Published : 22 Oct 2021 06:38 PM
Last Updated : 22 Oct 2021 06:38 PM

புதுச்சேரி கிரேன் ரோப் அறுந்து விழுந்து மேற்கு வங்கத் தொழிலாளி உயிரிழப்பு

புதுச்சேரி அருகே தனியார் தொழிற்சாலையில் கிரேன் ரோப் அறுந்து விழுந்து மேற்கு வங்க மாநிலத் தொழிலாளி உயிரிழந்தார். இதனால் எழுந்த கலவரத்தில் தொழிற்சாலைப் பொருட்கள், வாகனங்கள், போலீஸ் ஜீப் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன. போலீஸார், தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

புதுச்சேரி அருகே சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் செல்போன் டவர் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இங்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உஸ்மான் மாலிக் மகன் ஜிகர் மாலிக் (32) என்பவரும் பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் தொழிற்சாலை அருகில் வாடகை வீட்டில் தங்கியுள்ளாார்.

இந்நிலையில் இன்று (அக். 22) ஜிகர் மாலிக் வழக்கம்போல் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது தொழிற்சாலையில் கிரேன் உதவியுடன் இரும்பு உதிரிபாகங்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றப்பட்டன. அச்சமயம் எதிர்பாராதவிதமாக கிரேனின் ரோப் அறுந்து, அதிலிருந்த இரும்பு ராடு ஜிகர் மாலிக் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த ஜிகர் மாலிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்டித்து சக தொழிலாளர்கள் ஜிகர் மாலிக்கின் உடலைத் தரமறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேதராப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீஸார், தொழிலாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தைக் கைவிட தொழிலாளர்கள் மறுத்ததால் போலீஸாருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார், தொழிலாளர்கள் மீது தடியடி நடத்திக் கலைத்தனர்.

தொடர்ந்து, இறந்த தொழிலாளியின் உடலை போலீஸார் மீட்டு, தொழிற்சாலையிலிருந்து வெளியில் எடுத்துவர முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போலீஸ் ஜீப்பைக் கவிழ்த்து அடித்து நொறுக்கினர். மேலும், தொழிற்சாலையில் இருந்த பொருட்கள் மற்றும் வாகனங்களைச் சூறையாடினர்.

இந்தக் கலவரத்தில் சப் இன்ஸ்பெக்டர் முருகன், காவலர் வெங்கடேஷ் உட்பட 5 போலீஸார், 5 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட போலீஸார் தொழிற்சாலையில் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதன் பிறகு இறந்த தொழிலாளியின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையறிந்த சீனியர் எஸ்.பி. லோகேஷ்வரன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x