Published : 22 Oct 2021 03:06 AM
Last Updated : 22 Oct 2021 03:06 AM

கொளத்தூர் கபாலீஸ்வரர் கல்லூரி; உதவி பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை

அறநிலையத் துறை சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு உதவி பேராசிரியர், நூலகர், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 11 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவையில் 2021-22-ம்ஆண்டு அறநிலையத் துறை மானிய கோரிக்கையின்போது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் முதல்கட்டமாக சென்னை கொளத்தூர், திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 4 இடங்களில் பி.காம், பிபிஏ,பிசிஏ, பிஎஸ்சிகணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளை கொண்டு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்க கடந்த அக்.6-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த 4 கல்லூரிகளில் சென்னை கொளத்தூரில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் சோமநாத சுவாமி கோயிலுக்குசொந்தமான 5 ஏக்கர் நிலப்பரப்பில் கல்லூரி தொடங்க உத்தேசிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டிலேயே கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல்கல்லூரி தற்காலிகமாக கொளத்தூரில் உள்ள எவர்வின் மெட்ரிக்பள்ளி வளாகத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு மாணவ,மாணவியர் சேர்க்கை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சயாக பல்கலைக்கழக விதிகள்படி கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான உதவிப் பேராசிரியர் நேர்முகத் தேர்வுக்கு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, கடந்த அக்.18-ம் தேதி நேர்காணல் நடத்தப்பட்டது. தகுதி, அனுபவம், மதிப்பெண் அடிப்படையில் 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் நூலகர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட 11 பேருக்கும் பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை செயலர் பி.சந்திரமோகன், அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x